Breaking
Wed. Apr 24th, 2024

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த வருடம் மூன்றாவது மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூடவுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் இப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.ஆனால் தற்போதைய புதிய அரசாங்கம் இப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாமும் சகல தமிழ் தரப்பினரும் தற்போது இணைந்து ஒரு முன்மொழிவினை இப்பேரவையில் முன்வைக்கவே விரும்புகின்றோம்.

இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். சில அரசியல் தரப்பினர் அரசியல் இலாபங்களுக்காக இவ்விடயத்தில் செயற்பட முயல்கின்றனர். இந்த பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளன. இதில் 24 நாடுகளின் ஆதரவினை நாம் பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை நகர்த்த முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் காலஅவகாசம் கேட்டுள்ளதாக கருத்துக்கள் வெளிவந்தன. இவை முற்றுமுழுதான பொய்கள் ஆகும். இப்பொய்களை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம்.

இப்பேரவையின் விடயங்கள் குறித்து அறிக்கை விடும் சிலருக்கு இப்பேரவை எவ்வாறு இயங்குகின்றது என கூட தெரியாமல் உள்ளது.

அண்மையில் ஒரு சிலர் சர்வதேச நீதிமன்ற விசாரணையை இவ்விடயத்தில் கோருகின்றனர். அவ்வாறு இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதென்றால் இன்னுமொரு நாடு பிரேரணையை முன்வைக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்தும் இனி ஒரு நாடு வந்து பிரேரணை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் நம்பவில்லை. இதை சிலர் குறுகிய இலாப அரசியலுக்காக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் புதிய அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து நாம் இப்பேரவையினை பயன்படுத்த முடியும். 11 வருடங்களாக எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறக்காது இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நீதி கிடைக்கும் வரை நாம் போராட வேண்டும்.

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முஸ்லீம் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையை இப்பேரவையின் நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற இலங்கை அரசாங்கம் முஸ்லீம் நாடுகளின் ஆதரவினை பெற இஸ்லாமிய மதகுருக்களை அங்கு அழைத்து சென்றிருந்துடன் ஆதரவு கோரிக்கையை முன்வைத்திருந்தது. இதனால் இஸ்லாமிய நாடுகளும் அதன்போது ஆதரவாக வாக்களித்திருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கத்தை காப்பாற்ற வாக்களித்திருந்தனர். ஆனால் இன்று அச்சமூகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. அதாவது நல்லடக்கம் செய்யும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும். 2013 ஆண்டு திகண அளுத்கம வில் தொடங்கி தற்போது ஜனாசா வரை இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *