பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்லாத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலமொன்றின் போது அந்நாட்டு வலதுசாரி செயற்பாட்டாளர் ஒருவர், முஸ்லிம் பெண்ணொருவரை சனிக்கிழமை காரால் மோதிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளிக் காட்சிகள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரஸல்ஸ் நகரிலுள்ள விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையம் என்பவற்றின் மீது கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து அந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணப் போக்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை இஸ்லாத்துக்கு எதிராக அந்நாட்டு வலதுசாரி செயற்பாட்டாளர்களால் பிரஸல்ஸ் நகரில் அந்நாட்டின் ஜிஹாதிகளின் தலைநகர் என அழைக்கப்படும் மொலன்பீக் எனும் இடத்துக்கு அண்மையில் நடத்தப்பட்ட ஊர்வலத்தின் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த இஸ்லாமிய எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்த நிலையில் அந்தத் தடையையும் மீறி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய பிரஸல்ஸ் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க முயற்சித்தனர்.
இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டதுடன் 100 பேருக்கும் அதிகமானோரை கைதுசெய்தனர். அவர்களில் அநேகர் உடனடியாக விடுதலை செய்யப்பட்ட நிலையில் இருவர் மட்டுமே தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர் ஒருவர் தனது காரால் தெருவில் சென்ற முஸ்லிம் பெண்ணொருவரை மோதிச் சென்று படுகாயப்படுத்தியது மட்டுமல்லாமல், சிறிது தூரத்திற்கு அப்பால் காரை நிறுத்தி அந்தப் பெண் காயமடைந்து தெருவில் விழுந்து கிடக்கும் காட்சியை தனது கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படமெடுத்துள் ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலி ஸார் அந்த வலதுசாரி செயற்பாட்டாளரைக் கைது செய்துள்ளனர். அவரால் காரால் மோதப்பட்ட பெண் படுகாயமடைந்திருந்த போதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை சுய நினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.