கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வார நடுப்பகுதியில் அவரசமாகக் கூடவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்தக் கூட்டம், எப்போது, எங்கு நடத்தப்படவுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
அக்கட்சியின் செயலாளர் நாயகமான ஹசன் அலியின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதையடுத்தே, அக்கட்சிக்குள் முரண்பாடுகள் வலுப்பெற்றன. இந்த அவரசக்கூட்டத்தின் போது, தன்னுடைய அதிகாரங்கள் பூரணமாக மீளவும் ஒப்படைக்கப்படலாம் என்று செயலாளர் நாயகம் ஹசன் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் யாப்பை மாற்றும்படி கேட்டு, மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்ட பின்னர், கட்சியில் அபிப்பிராய பேதங்கள் தோன்றின.
மு.காவின் தீர்மானங்களை எடுக்கும் மு.காவின் உயர்பீட அங்கத்தவர்களால், இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆயினும், இந்த முயற்சி தனக்கு எதிரான சதி என்றும் தன்னைக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சி எனவும், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருதுகின்றார் என்று தகவல் கசிந்துள்ளது. மார்ச் 19ஆம் திகதியன்று பாலமுனையில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டிலும் ஹசன் அலி பங்குபற்றவில்லை.
தான், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோதும் தனது அதிகாரங்கள், கட்சித் தலைவரினால் குறைக்கப்பட்டதையிட்டு, ஹசன் அலி, மனம் கோணினார். தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டமையால், தான் மாநாட்டுக்கு வரவில்லை என அவர் கூறியிருந்தார். மாநாட்டுக்கு 3 நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளருக்கு, முன்னர் இருந்த அதிகாரங்கள் யாவும் மீள வழங்கப்படும் என வாக்கிறுதியளித்த போதும், கடந்த வார இறுதிவரை அந்த அதிகாரங்கள் திரும்ப வழங்கப்படவில்லை.
இதனால், ஹசன் அலி அம்மாநாட்டுக்கு வரவில்லை. இந்நிலையிலேயே இவ்வாரம் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டு, இந்தப் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் ஹசன் அலி கூறினார்.