குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் ஷாபி தொடர்பான சம்பவத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் சம்பந்தப்படுத்தி, தேவையில்லாமல் தலையிட்டு, தன்னை கஷ்டத்தில் தள்ளியதாக கூறி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரை கடுமையாக திட்டியுள்ளதாக தெரியவருகிறது.
அத்துரலியே ரதன தேரர், அண்மையில் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, அவர் கடும் கோபத்தில், ரதன தேரரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
“ இப்படியான முட்டாள் வேலையை செய்ய வேண்டாம் என்று நான் கூறினேன். கேட்கவில்லை. தற்போது வீதியில் இறங்கி செல்ல முடியாதுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் நான் இதனை கூறினேன். அவர்கள் ஆரம்பிக்கும் போது கஷ்டப்பட்டு அவர்களை தடுத்து நிறுத்தினேன்.
எனினும் தாய்மாருக்கு பணம் கொடுத்த விடயம் வெளியில் கசிந்துள்ளது. இனவாதத்தை பேச வேண்டிய நேரங்கள் இருக்கின்றன. அரசியலில் தொடர்ந்தும் இனவாதத்தை கையாண்டால், அனைத்தும் முடிந்து போகும்.
இந்த முட்டாள் பிக்கு எப்போதும் இதனை தான் செய்கிறார். அனைத்து விடயங்களிலும் தலையிடுகிறார்.
இவனின் முட்டாள் வேலைகளால் இறுதியில் எனக்கே பாதிப்பு. தெரியாத வேலைகளை செய்ய வேண்டாம். புண்ணியம் கிடைக்கும். தெரிந்ததை செய்துக்கொண்டு ஒதுங்கி இருங்கள்” என மகிந்த ராஜபக்ச, அத்துரலியே ரதன தேரரிடம் கூறியுள்ளார்.
ரதன தேரர் இவற்றை கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.