மன்னாரின் முன்னாள் ஆயர் இராஜப்பு சின்னப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான இராஜப்பு ஜோசெப் ஆண்டகையின் மறைவிற்கு விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள அஞ்சலி குறிப்பில்,
மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராஜப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
அவர் மிகப்பெரிய தமிழ் தேசிய பற்றாளராக சேவையாளராக மிகவும் அரப்பணிப்புடன் செயற்பட்டு வந்தவர்.
என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகநெருக்கமான உறவை வைத்திருந்தவர். நான் மன்னார் செல்லும் பொழுதெல்லாம் தவறாமல் அவரை சந்தித்தே வந்துள்ளேன்.
அவர் அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அபிவிருத்தி சம்பந்தமாகவும், தமிழ் தேசிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் என்னுடன் கலந்துரையாடுவார்.
அரசியல்ரீதியாக எங்களிற்குள் சில விடயங்களில் வெவ்வேறு பார்வைகள் இருந்திருந்தாலும், தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயங்களில், அபிவிருத்தி விடயங்களில் அவருடன் ஒன்றுபட்டு செயற்பட்டு வந்தோம்.
1994 பாராளுமன்றத்தின் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக செயற்பட்ட என்னிடம், வன்னி மாவட்ட மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைகளை, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் எடுத்து செல்லும்படி அவர் கேட்ட பல விடயங்களை நிறைவேற்றிருக்கிறேன்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக மேற்கொள்ள வேண்டிய பல சிபாரிசுகளை அவர் அடிக்கடி வழங்குவார். முக்கியமாக இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளையே அவர் குறிப்பிடுவார். அவற்றை நான் நிறைவேற்றியிருக்கிறேன்.
இவருடைய இழப்பு கத்தோலிக்க சமூகத்தினருக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருக்கும் பேரிழப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.