(அனா)
கடந்த காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
லங்கா சதொசவின் 378ஆவது கிளை மட்டக்களப்பு, கொக்கொட்டிச்சோலையில், சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,
சீனி உட்பட 12 அத்தியாவசிய பொருட்களுக்கு விலைகளை தன்னிச்சையாக அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.
இந்த வருடம் நிறைவடைவதற்குள் 500 சதோச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சீனி உட்பட 12 பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு நினைத்தவாறு விலைகளை அதிகரிக்க முடியாது.
சீனிக்கான தீர்வை விலையை 10ரூபாவினால் அதிகரித்ததற்காகவும் அதன் காரணமாக நுகர்வோருக்கான சீனியின் விலையினை வர்த்தகர்கள் அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்த அமைச்சர் இவற்றினை கண்காணிப்பதற்காக 200 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்று பேசுகின்றார்கள். ஆனால், தேர்தல் நோக்கங்களுக்காக, தங்களுடைய சுய நலன்களுக்காக அவர்களுடைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது, ஒற்றுமையை நாங்கள் காணவில்லை.
இருந்த போதிலும், தமிழர்களும் முஸ்லிம்களும், தங்களுக்குள்ளே பிளவுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கக் கூடாது. இவ்வாறு தொடரும் பட்சத்தில், இரண்டு சமூகங்களுக்கு இடையிலான உறவு, ஒருபோதும் தழைத்தோங்கப் போவதில்லை.
நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக, நாங்கள் பொருளாதாரத்தை இழந்தும் உறவுகளைப் பறிகொடுத்தும் உள்ளோம். அத்துடன், அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைமையும் எங்களுக்கு உருவாகியுள்ளது.
காணாமல் போனோரின் உறவினர்கள், காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் எனக் கூறி வீதிகளில் தவம் இருக்கின்றனர் என்றார்.