செய்திகள்பிரதான செய்திகள்

இலத்திரனியல் வணிகக் கொள்கை தாமதம், முன்னேறிச்செல்லும் உலகில் நாம் பின்தள்ளப்படக்கூடும். : நாமல்

செயற்திறன்மிக்க இலத்திரனியல் வணிகக் கொள்கையை உருவாக்குவதை இலங்கை இனிமேலும் தாமதப்படுத்தக்கூடாது. நவீன இலத்திரனியல் வணிகக் கொள்கை என்பது ஆடம்பரமானதொரு விடயமல்ல. மாறாக அது வேலைவாய்ப்பு உருவாக்கம், புத்தாக்கம், உலகளாவிய போட்டிக்கு ஈடுகொடுத்தல் என்பவற்றுக்கான அடிப்படையாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து நாமல் ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

செயற்திறன்மிக்க இலத்திரனியல் வணிகக் கொள்கையை உருவாக்குவதை இலங்கை இனிமேலும் தாமதப்படுத்தக்கூடாது. மாறாக உலகளாவிய யதார்த்தங்களையும், உள்நாட்டு இலக்குகளையும் பிரதிபலிக்கக்கூடியவாறு, எதிர்காலத்தை சிறந்தமுறையில் கட்டமைக்கக்கூடிய செயற்திட்டமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி தனியார்துறையினர், டிஜிட்டல் தளங்கள், ஏனைய தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவோர் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும்.

குறிப்பாக வணிகங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான இலத்திரனியல் கொடுக்கல், வாங்கல்களுக்கான செயன்முறையை இலகுபடுத்தல் உள்ளடங்கலாக வாடிக்கையாளர்களுக்கும், முயற்சியாளர்களுக்கும் இடையூறாக அமையக்கூடிய தடைகளை அடையாளங்கண்டு, அவை நீக்கப்பட்ட கொள்கையையே உருவாக்கவேண்டும். இது வெறுமனே வர்த்தகத்துடன் மாத்திரம் தொடர்புடைய விடயமல்ல. மாறாக உள்ளுர் புதிய முயற்சியாண்மைகள், சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்கள், டிஜிட்டல் புத்தாக்க உருவாக்குனர்கள் உள்ளடங்கலாக கீழ்மட்டத்தில் இருந்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோருக்கான புதிய வாய்ப்புக்களின் திறவுகோலாகவும் இது அமையும்.

இலங்கையின் டிஜிட்டல் ஏற்றுமதிகள் மற்றும் இலத்திரனியல் வணிகம் மூலமான நுகர்வுக்கோரிக்கைகள் என்பன தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன. எனவே இப்போது இலத்திரனியல் வணிகக் கொள்கையை உருவாக்குவதற்குத் தவறுவோமாயின், முன்னேறிச்செல்லும் உலகில் நாம் பின்தள்ளப்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. நவீனமான இலத்திரனியல் வணிகக் கொள்கை என்பது ஆடம்பரமானதொரு விடயமல்ல. மாறாக அது வேலைவாய்ப்பு உருவாக்கம், புத்தாக்கம், உலகளாவிய போட்டிக்கு ஈடுகொடுத்தல் என்பவற்றுக்கான அடிப்படையாகும் என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐ.நா.இலங்கைக்கு எதிராக 11நாடுகள் ஆதரவாக 22 நாடுகள்

wpengine

கிழக்கின் எழுச்சி! வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்துள்ளது.

wpengine

வவுனியாவில் உலர் உணவு பொதிகள் வினியோகம்

wpengine