(எம்.ரீ. ஹைதர் அலி)
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூன் அவர்கள் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2016.08.31ஆம்திகதி (புதன்கிழமை) இலங்கைக்கு வரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அவர் தங்கியிருக்கும் மூன்று நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவதோடு, காலி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையாகவே கடந்த கால யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகும். இறுதி யுத்தம் வட மாகாணத்தில் நடைபெற்றிருந்தாலும், 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலும் மிகப் பாரியளவிலான யுத்தம் நடைபெற்றுள்ளதோடு, இன்றுவரை கிழக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதோடு அவர்களை இன்னும் அவர்களுடைய குடும்ப உறவினர்கள் தேடிய வண்ணம் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டும் இன்றுவரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுக்கென்று ஒரு வீடு கூட இல்லாத நிலையில் உறவினர்கள் வீடுகளிலும், அகதி முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இப்பொழுது வட மாகாணத்தை விட கிழக்கு மாகாணத்திலே அதிகளவான முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருப்பதோடு, இவர்கள் கடந்த கால யுத்ததத்திலே அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுடைய குறைநிறைகளை கேட்டறிவதற்கு கிழக்கு மாகாணம் இன்றுவரை தெடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றதென்ற உண்மை மறைக்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.
இதை நாங்கள் பார்க்கின்றபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கிழக்கு மக்களுடைய அவலக்குரல்கள் உரிய இடங்களுக்கு போய்ச்சேராமல் அவர்களுக்குரிய நியாயம் கிடைக்காமல் இருக்கின்றதென்ற விடயம் மறைக்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குரிய ஆதாரங்கள் இன்றுவரை இருந்துகொண்டே இருக்கின்றன.
காத்தான்குடியில் இரு பள்ளிவாயல்களில் தொழுகை நேரத்தில் புலிகளால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்குரிய அடையாளங்கள், கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற குருக்கல் மடத்தினுள் காணப்படும் மனித புதைகுழிகள், ஏறாவூர் மற்றும் அனுங்கிப்பொத்தானை போன்ற பிரதேசங்களில் நடந்த துயரங்கள் என்பனவற்றை நாங்கள் பார்க்கின்றபோது மிக அதிகமான இழப்புக்களை முஸ்லிம்கள் சந்தித்துள்ளதோடு, இவ்வாறான விடயங்களை சர்வதேச முகவர்களுக்கும், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இலங்கை வருகின்றபோது தொடர்ச்சியாக இம்மக்களுடைய குரல்களை கேட்காமலும் கிழக்கு மாகாணத்திலே இருக்கக்கூடிய சிவில் அமைப்புக்களினுடைய குரல்களை கேட்காமலும் இருக்கின்ற விடயமென்பது மிகவும் கவலைக்குரியதொன்றாக இருக்கின்றது.
ஆகவே நாங்கள் கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கேட்டுக்கொள்ள இருக்கின்ற விடயம் என்னவென்றால் இம்முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூன் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயமொன்றினை மேற்கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டமான மட்டக்களப்புக்கும் அவர் வருகைதர வேண்டுமென்ற ஒரு விடயத்தினை கேட்டுக்கொள்ள ஆசைப்படுகின்றோம். ஏனென்றால் வெறுமனே யுத்தம் நடைபெற்றது வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் என்கின்ற ஒரு பிரம்மையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
வட மாகாணத்திற்கு சரிசமமாக கிழக்கு மாகாணத்தில் வசிக்கக்கூடிய அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இம்மக்களின் துயரங்களையும் கேட்டறிய இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வரவேண்டுமென்ற கோரிக்கையினை இலங்கையில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலம் ஆகியவற்றிற்கு 2016.08.27ஆந்திகதி (சனிக்கிழமை) இன்று கடிதம் மூலம் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.