Breaking
Sun. Nov 24th, 2024

இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் அங்கம் வகிக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெரும்பாலானோர், ஜமாஅதே இஸ்லாம், இக்வான் முஸ்லிம், தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் போன்ற அடிப்படைவாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றனர் என்று, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, (15) சாட்சியமளித்த அவர், குறித்த தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹஸீமுடன் இணைந்து, காத்தான்குடி நகரில் தவ்ஹீத் ஜமாஅத் கிளையொன்றை நிறுவிய அப்துல் ராஸிக் என்பவர், இன்றும் இந்த நாட்டுக்குள் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்து, அடிப்படைவாதத்தைப் பரப்பி வருவதாகவும் கூறினார்.

2020 பெப்ரவரி 7ஆம் திகதியன்று, வெலிகம – வெல்லபிட்டிய சாஹிரா கல்லூரியின் அபிவிருத்திக் குழு உறுப்பினரான எம்.ஆர்.மொஹமட் என்பவரிடமிருந்து, தனக்கு ஒரு கடிதம் கிடைத்ததாகவும் அப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபரான எம்.எச்.எம்.இன்னய்துல்லாஹ் என்பவர், ஜாமியா நலீமியா மத்ரஸாவில், வஹாப்வாதம் தொடர்பில் போதனை நடத்தும் சாஹிக் சுஹைல் என்பவரை அழைத்துவந்து, கல்லூரிக்குள் அடிப்படைவாதம் பற்றிக் கற்பிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2015இல் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய தேசிய முன்னணியினால், குறித்த கல்லூரி, அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்றும், அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளராக இருந்து, இன்று சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளராகச் செயற்பட்டு வரும் அப்துல் ராஸிக் என்பவரே, கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய மொஹமட் ஹஸ்துன் என்பவருக்கு, சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரனை, சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்க முன்னிலை வகித்தார் என்றும், ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைப்பதற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாளிகாவத்தையில் நடத்தப்பட்ட போராட்டத்திலும், ராஸிக் என்பவர் முன்னிலை வகித்தார் என்று கூறியுள்ள தேரர், அந்நபர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தின் வீடியோவையும், ஆணைக்குழுவில் சமர்ப்பித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *