பிரதான செய்திகள்

இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் ஷைகுல் பலாஹ் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் அவரது சரிதை நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 20.05.2016 வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸுல் பலாஹிய்யீனின் ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸம் ஸம் பவுண்டேஷனின் தலைவர் அஷ்ஷெ்ய்க் யூசுப் ஹனீபா (முப்தி) கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் இந் நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) கலந்து கொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வின் முதலாவது அமர்வில் ‘ஷைகுல் பலாஹ் சரிதை’ எனும் தலைப்பிலான நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன் இரண்டாவது அமர்வில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ முஹம்மது அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்கள் இந்திய நாட்டின் மலையாளப் பிரதேசத்தைச் சேர்ந்த கொச்சிப் பட்டினத்தை தாயகமாகக் கொண்ட அஷ்ஷெய்க் கோஜா அலவி அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களாவார்.

ஷைகுல் பலாஹ் அவர்கள் தென் இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம் பட்டினத்தில் 21.03.1932இல் பிறந்தார்கள். இவர்களின் பாட்டனார் அல்லாமா ஷைகு அப்துல் காதிர் ஹஸரத் அவர்களாவர். இவர்கள் பிரபலமான முஹிம்மாதுல் முதஅல்லிமீன், அஹ்ஸனுல் மவாஇழ், மஜ்மூஉல் கவாஇத் போன்ற அநேக அறபு நூற்களை எழுதியுள்ளார்கள்.

இலங்கைத் தலைநகர் கொழும்பு மாநகரில் இஸ்லாமியக் கட்டடக் கலை அம்சங்களுடன் கம்பீரமாகக் காட்சி தரும் ஜாமிஉல் அழ்பர் எனும் சம்மாங்கோட்டுப் பள்ளிவாயலைக் கட்டுவதற்கு நிலம் கொடுத்துதவி பலத்த பிரயாசையுடன் அதனைக் கட்டி முடித்தவர்கள் இவர்களே. இதனாலேயே இன்று வரை இப்பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் பதவியை இவர்களின் குடும்பத்தினர் வகித்து வருகின்றனர்.  சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அவர்களே தற்போது இப்பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளராக இருக்கிறார்கள்.

 ஷைகுல் பலாஹ் அவர்களின் தந்தை தென்னிந்தியாவின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம் பட்டினத்தில் வாழ்ந்த அல்லாமா அல்ஹாஜ் முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களாவர். தலைசிறந்த மார்க்க மேதையான இவர்கள் இந்தியாவின் பல பாகங்களில் மட்டுமல்ல இலங்கையிலும் அறிவுப்பணி புரிந்திருக்கிறார்கள்.

1950ஆம் ஆண்டு தொடக்கம் 1954ஆம் ஆண்டு வரை மஹரகம கபூரிய்யா அறபுக்கல்லூரிப் பேராசிரியராகவும் 1955 தொடக்கம் 1965 வரை அட்டாளைச்சேனை கிழக்கிழங்கை அறபுக்கல்லூரி அதிபராகவும் பணியாற்றி விட்டு இந்தியாவில் கீழக்கரை, உடன்குடி ஆகிய இடங்களிலுள்ள அறபுக் கல்லூரிகளில் தமது அந்திம காலம் வரை அறிவுப்பணி புரிந்து வபாத்தானார்கள். ஷைகுல் பலாஹ் அவர்களின் தாயாரான நபீஸா உம்மா அவர்கள் வயது முதிர்ந்த நிலையில்  தனது சொந்த ஊரில் வபாத்தானார்கள்.

ஷைகுல் பலாஹ் அவர்கள் தமது சொந்த ஊராகிய அதிராம் பட்டிணத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார்கள் பின்னர் இஸ்லாமிய மார்க்கக் கலையில் உயர் கல்வியை அவ்வூரிலுள்ள அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா உயர் கல்லூரியில் பயின்று 01.04.1954 இல் மௌலவிப் பட்டம் பெற்றார்கள். அல்லாமா அஸ்ஸெய்யித் அலவீ தங்கள் அஷ்ஷெய்க் அகமது கபீர், அல்லாமா முஹம்மது முஸ்தபா (பாகவீ) மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.எஸ்.எம் நெய்னா முஹம்மது ஆலிம் ஸாஹிப் ஆகிய அறிஞர்களிடம் இவர்கள் கல்வி பயின்றுள்ளார்கள்.

முதன் முதலாக தமது சொந்த ஊரான அதிராம் பட்டினத்திலுள்ள அல் மத்ரஸதுஸ் ஸலாஹிய்யாவில் அதிபராகப் பதவியேற்று நான்கு ஆண்டு காலம் அங்கு அறிவுப் பணியாற்றினார்கள். பின்னர்  03.05.1958 இல் தமது தந்தையாருடன் இலங்கைக்கு வந்து 1959 ஆம் ஆண்டு வரை அட்டாளைச் சேனை கிழக்கிழங்கை அறபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார்கள்.

இவ்வேளையில் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹுக்கு திறமை வாய்ந்த ஓர் அதிபர் தேவையாயிருந்தது. ஜாமிஆ இயக்குநர்களின் சளையா முயற்சியாலும் அல்லாஹ்வின் பேருதவியாலும் ஷைகுல் பலாஹ் அவர்கள் 13.10.1959 இல் இங்கு பணியாற்ற வருகை தந்தார்கள். ஒரு வருட காலம் இங்கு உப அதிபராகப் பணியாற்றிய இவர்கள் பின்னர் இதன் அதிபர் பொறுப்பை ஏற்றார்கள். இவர்களின் வருகையால்  ஜாமிஅதுல் பலாஹ் பெருவளர்ச்சி கண்டது. இவர்கள் தமது தன்னிகரற்ற பெரும் பணிகளால் இதனைக் கட்டிக் காத்து வருகிறார்கள்.

சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அவர்கள் 02.09.1961இல் அதிராம் பட்டினம்  செ.மு.க.நூறு முஹம்மது மரைக்காயர் அவர்களின் புதல்வியான உம்முல் பஜ்ரியா அவர்களை மண முடித்தார்கள். இவர்களுக்கு முஹம்மது றஹ்மதுலலாஹ், முஹம்மது முஸ்தபா, முஹம்மது பறகதுல்லாஹ் ஆகிய புதல்வர்கள் உள்ளனர். மனைவி உம்முல் பஜ்ரியா அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

மூத்த புதல்வர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள்  ஜாமிஅதுல் பலாஹில் மார்க்கக் கல்வி பயின்று 1991 ஆம் ஆண்டு மௌலவி பலாஹீ பட்டம் பெற்று தற்போது வாழைச்சேனை குல்லியதுந் நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றுகின்றார். இவர் பல அறிவு நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார் ‘ அகிலத்தை ஆராய்ந்து அல்லாஹ்வை அறிவது எப்படி? என்ற இவரது நூல் மிகவும் பிரபலமானது. பல அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

அடுத்த மகன் முஹம்மது முஸ்தபா அவர்கள் நோய் வாய்ப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தவாறே வபாத்தாகி விட்டார்கள். மூன்றாவது மகன் முஹம்மது பறகதுல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இயங்கும் ஜாமிஆ மதீனதுல் இல்ம் கலாபீடத்தில் ‘ஹாபிழ்’ பட்டம் பெற்றபின் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் மௌலவி ‘பலாஹீ’ பட்டத்தையும் பெற்று தற்போது அக் கல்லூரியிலேயே ஷரீஆத் துறை விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்கள்.

ஷைகுல் பலாஹ் அவர்கள் கடந்த ஐம்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் அதிபராகப் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தன்னிகரற்ற பணிகளால் இக் கல்லூரி பெரு வளர்ச்சி கண்டிருப்பதை யாவரும் அறிவர். இரவு பகலாக இதன் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாமிஆவின் அதிபராக இருப்பதுடன் காத்தான்குடி நகரை இஸ்லாமிய நெறிமுறையில் வழிநடாத்தும் தலைவராகவும் இலங்கை முழுவதிலும்  வாழும்  மக்களால் மதித்துப் போற்றப்படும் ஒரு   பெரியாராகவும் விளங்குகிறார்கள். காத்தான்குடி மக்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்கு கொண்டு பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றை சுமுகமாகத் தீர்த்து வைத்து ஒரு சமாதானத் தூதுவராகச் செயற்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இலங்கையின் பல பகுதிகளிலும் சமய விழாக்களுக்கும் அறபுக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களுக்கும் இவர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். இலங்கையில் புதிய தொழுகை நேரம் அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் எழுந்தபோது இவர்கள் தலையிட்டு அதனை சுமுகமாகத் தீர்த்து வைத்ததால் இலங்கை முழுவதிலும் புதிய தொழுகை நேரம் அமுல்படுத்தப்பட்டது.

  காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும் தொடர்ந்து சிறப்பாகச் செயற்படவேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டு அவற்றின் ஆலோசகராக விளங்கி தமது மேலான ஆலோசனைகளால் அவற்றை வழிநடாத்தி வருகிறார்கள். பணிவும், தன்னடக்கமும் ஷைகுல் பலாஹ் அவர்களிடம் இயற்கையாகவே அமைந்து விட்ட பண்புகள். எல்லோருடனும் அன்பாகப் பேசி, சாந்தமாக அளவளாவி அனைவர் மனத்தையும் கவர்ந்துவிடும் தனிச்சக்தி இவர்களிடம் உள்ளது.

இஸ்லாமிய மார்க்க அறிவில் ஆழ்ந்த புலமை மிக்க இவர்கள் தமது மாணவர்களைத் தேர்ந்த அறிஞர்களாகவும் உயர்ந்த ஒழுக்க சீலர்களாகவும் ஆக்குவதில் மகத்தான பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிறந்த பொன்னாடு, உற்றார், உறவினர் சுற்றத்தார் அனைவரையும் பிரிந்து கடல் கடந்து வந்து தமது முழு நேரத்தையும் ஜாமிஆவுக்காகவே செலவழித்துக் கொண்டிருக்கும் அன்னாரின் சேம நலனுக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திப்போம்.  என

-மஜ்லிஸுல் பலாஹிய்யீன் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டம்

wpengine

அமைச்சர் ஒருவரின் காரின் பெறுமதி 4.5கோடி ரூபா

wpengine

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை.

wpengine