(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தேர்தல் விடயங்களை அறிக்கையிடுவது பற்றி மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்து நேற்று 08 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பிரிஜ் வீவ் ஹோட்டலில் நடாத்தியது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குமார் லோபஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் அச்சு,இலத்தரணியல்,இணைய ஊகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊடகவியலாளர்கள் தேர்தல் அறிக்கையிடலின் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்,தகவல் அறியும் உரிமை,இலங்கையில் காணப்படும் உள்ளுராட்சி தேர்தல்,மாகாண சபைத் தேர்தல்,பாராளுமன்ற பொதுத் தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல் போன்ற தேர்தல்களின் போது ஊடகவியலாளர்களால் வெளியிடப்படும் செய்தி,சிறப்பு கட்டுரை,புகைப்படங்கள்,நேர்கா ணல்கள் போன்றவற்றின் போது ஊடகவியலாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தமிழ் பிரிவுக்கான பொறுப்பதிகாரி எம்.எஸ்.அமீர் ஹூஸைன் விரிவுரை நிகழ்த்தினார்.

இங்கு தகவல் அறியும் உரிமை தொடர்பான வீடியோ ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன்,இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் 2014 மீளாய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்க நெறிக்கோவை மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய 2012 ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிகள் தொடர்பான கையேடு ,இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட தகவல் அறியும் உரிமை ஒரு வழிகாட்டி எனும் நூல் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த தேர்தல் விடயங்களை அறிக்கையிடுவது பற்றிய கருத்தரங்கு மட்டக்களப்பு,பொளன்னறுவை,வவுனி யா,குருநாகல் போன்ற மாவட்டங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.