Breaking
Sun. Nov 24th, 2024

(மூர்சித் முஹம்மது)

கவிதைகளுக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்துப் பேசும் பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம்.

தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பை வழங்கியவர் ஆத்மாநாம்.

கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும்  மெய்ப்பொருள் பதிப்பகம் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.

2015ஆம் ஆண்டு கவிஞர் இசை அவர்களுக்கும் 2016ஆம்  ஆண்டு  ‘மீகாமம்’ தொகுப்புக்காகக் கவிஞர் க.மோகனரங்கன் அவர்களுக்கும் ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’ வழங்கப்பட்டது.

முதற்கட்டமாகக் கவிஞர் கலாப்ரியாவை நெறியாளராகக் கொண்டு கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க. மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு  2017ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருதுக்குரிய கவிதைத் தொகுப்பை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கச் செயல்பட்டது. அக்குழு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்து அளித்த  தேர்வுச் சிறுபட்டியல் 2017 மே மாதம் வெளியிடப்பட்டது.

இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறு பட்டியலிலிருந்து கவிஞர் சுகுமாரன் அவர்களின் தலைமையில் எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க.மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது.  நடுவர் குழுவின் முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.25000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் விருது  ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

மூன்றாம் ஆண்டில் கவிஞர்ஆத்மாநாம் அறக்கட்டளை பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதைத் தொகுப்புகளுக்கு இந்த ஆண்டிலிருந்து ‘கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது – 2017’

விருதினை வழங்க முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்பிற்கு ரூபாய் 10,000/- உள்ளடக்கிய ‘கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது’ம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.

மொழிபெயர்ப்பாளர்கள் ஆர். சிவகுமார், ஜி. குப்புசாமி, எழுத்தாளர்  ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர்  நடுவர்களாகச் செயல்பட்டு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து 2017ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருதுக்குரிய கவிதைத் தொகுதியை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கக் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளைக்கு அனுப்பிய முதற்கட்டத் தேர்வுச் சிறுபட்டியல் 2017 மே மாதம் வெளியிடப்பட்டது.

இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறுபட்டியலிலிருந்து நடுவர் குழு  விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது.  அம்முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.10000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது – 2017    ‘தாகங்கொண்ட மீனொன்று: ஜலாலுத்தின் ரூமி’ கவிதை நூலுக்காக  என். சத்தியமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

இந்த ஆண்டுக்கான (2017) விருதுவிழா வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும்.

தகவல்:
கவிஞர் வேல் கண்ணன்,அறங்காவலர்,
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை,
சென்னை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *