கட்டுரைகள்செய்திகள்

இலங்கையில் 2024ஆம் ஆண்டு 213 வரை பள்ளி செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்.

இலங்கையில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள சிறுமிகள் மத்தியில் பதிவாகியுள்ள குழந்தை கர்ப்பிணிகளில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யபட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு 163 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கையானது 213 வரை அதிகரித்துள்ளதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2024ஆம் ஆண்டு பதிவான குழந்தைத் தாய்மார்களுக்கு மத்தியில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும், அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள குழுந்தைத் தாய்மார்களை விடவும், அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தாய்மார்கள் இலங்கையில் இருக்கக்கூடும் என போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக பிரிவிற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அனுமதிக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தின் பிரகாரம், 18 வயதுக்கு குறைவான அனைவரும் சிறுவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தண்டனைச் சட்ட கோவையின் 363(இ) சரத்தின் பிரகாரம், 16 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் ”ஒப்புதல்” பொருந்தாது என்பதால், அவ்வாறானவர்களுடன் உடலுறவு கொள்வதானது ”பாலியல் வன்கொடுமை” எனக் கருதப்படுகின்றது.

சிறு வயது காதல் காரணமாக ஏற்படும் சம்பவங்கள்

தற்போது பதிவாகின்ற குழந்தைகள் கர்ப்பமடைவதானது, காதல் தொடர்புகளின் பெறுபேறுகளினால் ஏற்படுகின்ற சம்பவம் என பிரதி போலீஸ் மாஅதிபர் குறிப்பிடுகின்றார்.

”இதில், 16 வயதுக்குக் குறைவான சிறுமிகளின் விருப்பத்துடன் இடம் பெறுகின்ற சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையே எமக்குள்ள பிரச்னையாகும். அது துஷ்பிரயோகம் என சட்ட ரீதியாக உரித்தானாலும், அது பலவந்தமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. காதல் ஏற்பட்டு விருப்பத்துடன் இடம்பெற்ற சம்பவங்களாலேயே அந்தச் சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்.”

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலவந்தமாக இடம்பெற்ற துஷ்பிரயோகங்களில் கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கு வாய்ப்பில்லை. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கும்போது, அந்தச் சிறுமி கர்ப்பமடைந்து பல மாதங்கள் ஆகியிருக்கும் எனவும் அவர் கூறுகின்றார்.

”பலவந்தமாக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கட்டாயம் போலீஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கும். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும்

சம்பவம் இடம்பெற்று முதல் 24 அல்லது 48 மணித்தியாலங்களுக்குள் வருகை தரும் பட்சத்தில், நீதிமன்றம், மருத்துவர்கள் அது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால், அவர்களுடன் சம்பந்தப்பட்ட சிறுமிகள் தொடர்புகளைப் பேணுகின்றமையினால் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால், அவர்கள் அவற்றை மறைத்து காலம் செல்லும் போதே அறிந்துகொள்ள முடிகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், குழந்தைகள் கர்ப்பமடைந்தால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தவிர்த்து, கர்ப்பத்தைக் கலைப்பதற்கு சட்டத்தின் இயலுமை இல்லை.

நாட்டில் தற்போது பதிவாகின்ற சில சம்பவங்களில், கர்ப்பத்திற்குப் பொறுப்பு கூற வேண்டிய ஆண்கள், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எனவும் பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.

அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில், இவ்வாறான சம்பவங்களில் 14 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட பெண் குழந்தைகள் உட்படுத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குழந்தைத் தாய்மார்களின் குழந்தைகள் ”பாதிக்கப்பட்டவர்களாகவே” இந்த உலகத்தைக் காண்பதாகக் கூறும் பிரதி போலீஸ் மாஅதிபர், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சமூகத்தின் கவனம் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

”யாரும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதை நான் காணவில்லை. இவர்களை நீதிமன்றம் வேறு யாருக்காவது ஒப்படைத்து விடும். பெரும்பாலும் அவர்களின் குடும்பத்திடமே ஒப்படைக்கப்படும். விருப்பம் என்றால் வளர்த்துக்கொள்ள முடியும்.”

பாலியல் தொடர்பான போதிய தெளிவின்மையே குழந்தைகள் இவ்வாறான பேராபத்திற்கு முகம் கொடுக்கக் காரணம் என பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர கூறுகின்றார்.

”பாலியல் தொடர்பான கல்வி, அது தொடர்பில் காணப்படும் அறிவு மற்றும் தேவையற்ற விதத்தில் கர்ப்பமடைவதைப் பாதுகாத்துக் கொள்வது ஆகியவை குறித்த தெளிவின்மை இதற்கு ஒரு காரணம். பாலியல் உறவைப் பேணும் ஒருவராயின், அவர் கட்டாயமாக கருத்தடை சாதனங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு வயது எல்லை எதுவும் கிடையாது.

”நாங்கள் இந்தச் சம்பங்கள் குறித்துப் பார்க்கும்போது அந்தச் சிறுமிகள் அது தொடர்பில் அறிந்திருப்பதில்லை என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது” என்பதை விசாரணை அனுபவங்களின் ஊடாக அவர் குறிப்பிட்டார்.

”நாங்கள் இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராயும்போது, குடும்பங்களில் காணப்படும் பிரச்னைகள் குறித்து அதிகளவில் அவதானிக்கின்றோம். பெரும்பாலான சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கின்றார்கள். தாயும், தந்தையும் பிரிந்துள்ளமை அதற்கான காரணம். இவ்வாறான நிலையிலேயே காதலுக்கு மிகவும் விரைவாக அடிமையாகின்றனர்.”

எவ்வாறாயினும், சரியாக இந்த நிலைமைக்கான காரணம் தொடர்பில் கூற முடியாது என போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதானி பிரதி போலீஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர குறிப்பிடுகின்றார்.

குழந்தைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நடைமுறை இல்லாமையால், பாலியல் தொடர்பில் முறைசாரா விதத்தில் அவர்கள் அறிவைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் நுவன் தோடவத்த, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

”பாடசாலை கல்வியில் முறையான விதத்தில் இவற்றைக் கற்பிப்பதில்லை. அதனால், முறைசாரா விதத்தில் அவர்கள் இது தொடர்பான அறிவைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பெரியோரிடம், நண்பர்களிடம், பாலியல் திரைப்படங்களைப் பார்த்து இவ்வாறான அறிவைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தெளிவின்மை காரணமாகவே குழந்தைகள் கர்ப்பமடைகின்றனர். அவ்வாறானவர்களை நாங்கள் சந்திக்கின்றோம்.”

”இலங்கையில் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்குக்கூட இது தொடர்பில் தெரியாது. துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரியவர்களாக இல்லாத போதிலும்கூட, அவர்கள் அது குறித்து அறிந்திருக்க மாட்டார்கள்” என அவர் கூறுகின்றார்.

குழந்தைகள் ஆபத்தில் விழும் சந்தர்ப்பங்கள் தொடர்பான தெளிவு வழங்கப்படுவதில்லை எனக் கூறும் மருத்துவ அதிகாரி தோடவத்த, எதிர்காலத்தைத் திட்டமிடும் வகையிலான கல்வி இல்லாமையானது, பாரிய பிரச்னை எனத் தெரிவிக்கின்றார்.

”துஷ்பிரயோகத்தை ஒருபுறத்தில் வைப்போம். எமது இளைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான குழந்தைகள் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு, 19 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்கென ஒரு குடும்பம் என்ற கற்பனை உலகத்திற்குள் விரைவாகப் பிரவேசிக்க முயல்கின்றனர்.”

”இந்தக் குழந்தைகள் ஆபத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் தெளிவு வழங்கப்படுவதில்லை. உதாரணமாக சமூக ஊடகப் பயன்பாட்டைக் கூற முடிகின்றது. அவ்வாறான இடத்தில் அதிக ஆபத்து எந்த இடத்தில் இருக்கின்றது. அதை புத்திசாதுரியமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பவை எந்தவோர் இடத்திலும் கல்வி முறையில் கற்பிக்கப்படவில்லை” என அவர் குறிப்பிடுகின்றார்.

குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொடுக்கும் வயது தொடர்பில் டாக்டர் நுவன் தோடவத்தவிடம் வினவப்பட்டது.

”சிறு வயது முதலே, தமது உடலிலுள்ள உறுப்புகள் குறித்த தெளிவு கிடைக்கும் சந்தர்ப்பத்திலேயே, சிறிது சிறிதாக இந்த அறிவை வழங்க ஆரம்பிக்க வேண்டும். மூன்று வயது குழந்தைக்கு மாதவிடாய் சுழற்சி புரிவதில்லை. எனினும், வயிற்றைப் பிடிப்பது, முகத்தைப் பிடிப்பது, மார்பைப் பிடிப்பது புரியும்.”

குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக இது தொடர்பான கல்வியை ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்ட வேலைத் திட்டத்தின் ஊடாக கல்வி முறையில் இவ்வாறான சம்பவங்களைக் குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

Related posts

ISIS இயக்கத்தின் கதை முடியப்போகிறது.

wpengine

மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட கபாலி தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி

Maash

மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் .!

Maash