இலங்கையில் 2021 டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 22.1% அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
2013 ஆம் ஆண்டு கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பணவீக்கம் கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவம்பரில் பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலையுயர்வு 17.5% என்ற அளவில் உயர்ந்தது.
எனினும் டிசம்பரில் அது 22.1% ஆக அதிகரித்தது.
டிசம்பரில் ஒட்டுமொத்த பணவீக்கம் 12.01% ஆக இருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், பணப்புழக்கத்தில் சிக்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாக நம்பிக்கை தெரிவித்த போதிலும், முடங்கும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவிக்கவில்லை என்று இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
சர்வதேச தர நிர்ணய முகவர் நிலையங்கள் இலங்கையின் தரத்தை குறைத்துள்ளதுடன், 26 பில்லியன் டொலர் கடன்களை செலுத்தும் திறன் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
வணிக வங்கிகளிடம், இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாமல் போனதால் பல்பொருள் அங்காடிகள் பல மாதங்களாக பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
விவசாய இரசாயன இறக்குமதி மீதான அரசாங்கத்தின் தடையால் உணவுப் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது.
இந்தநிலையில் 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 7.5 பில்லியன் டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நவம்பர் மாத இறுதியில் வெறும் 1.58 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளன