புனித ரமழான் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு எவ்வித புதிய வரியும் அறவிடப்பட மாட்டாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு வரை இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பேரீச்சம் பழத்திற்கு மொத்தமாக 130 ரூபா வரி அறவிடப்பட்டதாக நிதி அமைச்சின் வியாபார மற்றும் முதலீட்டு கொள்கைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி அத்தியாவசியப் பொருட்களுக்காக மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தத்திற்கு அமைய, ஒரு கிலோகிராம் பேரீச்சம் பழத்திற்கு 60 ரூபா விசேட வர்த்தக வரி அறவிடப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, ஏற்கனவே பேரீச்சம் பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரி 70 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, புனித ரமழான் காலத்தில் வெளிநாடுகளால் அன்பளிப்பாக வழங்கப்படும் பேரீச்சம் பழத்திற்கு செலுத்த வேண்டிய வரியை, அரசாங்கம் செலுத்துவதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் பேரீச்சம் பழத்திற்கு 60 ரூபா புதிய வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.