(சுஐப் எம் காசிம்)
வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் மிக மோசமாக அழிவுக்குட்பட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் அனைத்துப் பிரதேசங்களையும் துரிதமாக மீள்கட்டியெழுப்பி பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார்.
இந்தப்பிரதேசத்தில் இடம்பெற்ற சேத விபரங்களின் மதிப்பீட்டறிக்கையை ஒரு வார காலத்துக்குள் கையளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இரத்தினபுரி தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களையும் சீர் செய்யும் பணிக்காக பொறுப்பாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் றிஷாடின் தலைமையில் இரத்தினபுரி பிரதேச செயலக கட்டிடத்தில் உயர்மட்ட மாநாடு ஒன்று கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, மனோ கணேசன், ஏ.ஏ.விஜயதுங்க எம்.பி, அரச அதிபர் மாலனி பொத்தே கம, கஜூகஸ்வதே விகாராதிபதி அக்கரல்லே பஞ்ஞா சீல தேரர் உட்பட அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், படை உயர் அதிகாரிகள் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்கள், அமைச்சின் அதிகாரிகள், எனப்பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தினால் அசுத்தமாக்கப்பட்ட கிணறுகள், நீர் நிலைகள் மற்றும் வடிகான்களை துப்பரவு செய்யும் பணியை இன்னும் ஒரு வார காலத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் பணிப்புரை விடுத்த அமைச்சர் றிஷாட் அந்தப்பணிகளை இராணுவத்திடம் ஒப்படைத்தார். இராணுவத்துக்கு உதவியாக மேலதிகமான ஆளணிகளை வழங்கும் பொறுப்பையும் வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பபையும் இலங்கை சீனிக்கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைத்ததுடன் தேவையான நீரிறைக்கும் பம்பிகள், இயந்திராதிள் மற்றும் குளோரின் ஆகிவற்றையும் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுத்தார்.
வீடுகளை இழந்து பரிதவிக்கும் மக்களின் தற்காலிக இருப்புக்காக கூடாரங்களும் உடன் பெற்றுத்தரப்படுமென உறுதியளித்த அமைச்சர் நிரந்தர வாழிட தேவைக்காக வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு மீள அமைத்துக் கொடுக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வீடுகளை மீள நிர்மாணிக்க அரசாங்கம் ஆகக்கூடிய தொகையாக 25 இலட்சம் வழங்கும.; பகுதியாகவோ ஓரளவு பகுதியாகவோ பரிதக்கப்பட்ட வீடுகளை திருத்தவும் புரனரமைக்கவும் அரசு உதவும். ஆனர்த்த நிவாரன அமைச்சுடன் இணைந்து தனது அமைச்சு இந்தப் பணிகளை செவ்வனே முன்னெடுக்கும் எனினும் வீடுகள் உரிய முறையில் அமைத்துக்கொடுக்கப்படும் வரை பாதிக்கப்பட்ட மக்களை நிம்மதியாக வாழச்செய்யும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கு இருக்கின்றது. சமையலறைப் பாத்திரங்களுக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாவை அவசரமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
தொழில்களை இழந்தவர்களுக்கும் தனது அமைச்சினூடாக விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு கைத்தொழில் சிறு வியாபாரம் செய்தவர்களுக்கு தனது அமைச்சின் கீழான நெடா மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றினூடாக நன்கொடைகளும் கடன் உதவியும் வழங்கப்படும்.
மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரா நிலையங்களுக்கும் நஷ்டயீடு பெற்றுக்கொடுக்கப்படும்.
க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களின் கல்வியில் எந்தப் பாதிப்பும் வராது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்விப் பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் றிஷாட் அது தொடர்பிலான தேவைகளை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.
இரத்தினபுரியின் சகஜ வாழ்வுக்கு அனைத்துதரப்பினரதும் ஒத்துழைப்பையும் அமைச்சர் கோரினார்.