கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மர்மமான கொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், மிகப் பெரியளவிலான நிதி மோசடிகள் உட்பட பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிலரை அடுத்த இரண்டு வாரங்களில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் தற்போதைய அரசாங்கத்தில் நடந்துள்ள சில நிதி மோசடிகள் சம்பந்தமாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
விசாரணைகளை துரிதமாக முடிக்குமாறு, இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவு , கொழும்பு குற்றம் தடுப்பு பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலை உட்பட மர்மமான கொலை சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன.
மேலும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த மிகப் பெரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.