ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு மிகச்சிறந்த வேட்பாளர் யார் என்பதை தெரிவுசெய்வதற்காக மத்திய செயற்குழுவையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து இரகசிய வாக்கெடுப்பை நடத்தும்படி கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் இணைந்து இந்தக் கடிதத்தை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரதமருக்கு அனுப்பியிருப்பதாக கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமான உறுப்பினர்களே கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தை அனுப்பியிருப்பதாக மேலும் தெரியவருகின்றது.
முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும் நெருக்கடியான சூழல் அக்கட்சிக்குள் உருவாகியிருப்பதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் சஜித் பிரேமதாசவை நியமிக்க கூடாது என்பதில் ரணிலுக்கு நெருக்கமான உறுப்பினர்கள் அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை ரணிலுக்கும் சஜித்தை நியமிப்பதில் உடன்பாடு இல்லை என்னும் தகவலும் கசிந்துள்ளன.
ஜனாதிபதியாக சஜித் தெரிவு செய்யப்பட்டால் கட்சியின் தலைமைப் பொறுப்பு சஜித்தின் கைகளுக்குச் சென்றுவிடும் என்ற அச்சம் ரணில் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்களுக்கு இருக்கிறது.
இதன்காரணமாக வேட்பாளர் அறிவிப்பை தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் ரணிலின் இந்தத் தாமதம் சஜித்திற்கான ஆதரவு அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக சஜித் பிரேமதாசவிற்கு கட்சியில் இருக்கும் பின்வரிசை உறுப்பினர்கள் ஏகோபித்த ஆதரவை கொடுக்கிறார்கள்.
அதேவேளை மக்கள் ஆதரவை பெறும் நோக்கில் சஜித் மேடைகளின் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
இச்சூழலில் தான் ரணில் தவிர்க்க முடியாத நிலையில் சஜித்தை வேட்பாளராக அறிவிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.
ஆனால், ரணிலுக்கு நெருக்கமானவர்கள் இதற்கு ஆதரவு கொடுக்காமல் எச்சரிக்கை மணியடித்திருக்கிறார்கள்.
இந்த நெருக்கடி நிலையிலிருந்து ரணில் விக்ரமசிங்க எப்படி தப்பிக்கப் போகின்றார் என்பதை வரும் சில நாட்களில் தெரிந்து கொள்ள முடியும்.