பிரதான செய்திகள்

இப்தார் சிந்தனைக்குள் அலைக்கழியும் முஸ்லிம் தேசியம்!

(சுஐப் எம். காசிம்) 
ரமழான் மனிதனைச் சுத்தப்படுத்தி அவனது எதிர்கால வாழ்க்கைக்குப் பயிற்றுவிக்கிறது. இந்த ஆத்மீகப் பயிற்சி அவனது அடுத்த இலட்சியத்தை வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பதே எமது நம்பிக்கை. எனினும் இப்தார் நிகழ்வுகள் இன்று சிலரை மிக எளிதான சிந்தனைக்குட்படுத்தி அலைக்கழிக்கும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஆத்மீக நிகழ்வுகளும் அரசியலுக்காக அலங்கரிக்கப்படுகின்ற நிலைமையே இன்று ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத் தேர்தல்களை நாடி பிடிக்கும் களப்பரீட்சிப்புக்காகவே இம்முறை பல இப்தார்கள் நடத்தப்பட்டன. இக்களப் பரீட்சையில் தேறவும் தெரியாமல், தோற்கவும் முடியாமல் பல முஸ்லிம் பிரபலங்கள் அலை மோதியதே இன்றைய அவமானம். எதற்காக இப்தாரில் பங்கேற்கிறோம், யாருடைய இப்தாரில் கைகோர்க்கிறோம் என்ற தெளிவும் இவர்களிடம் இருந்ததில்லை. இருந்திருந்தால் மத நல்லிணக்கத்தின் பெயரில், அரசியல் காய் நகர்த்தல்களும், தேர்தலுக்கான அடுத்த கட்ட நகர்வுகளுமே முன்னகர்த்தப்படுவதை இவர்கள் உணர்ந்திருப்பர்.

இந்த உணர்வும் பொறுப்பும் முஸ்லிம் தலைமைகளையும், சில முஸ்லிம் பிரபல்யங்களையும் அரசியலில் சரியாக வழி நடத்தியிருக்கும் பாதையின் ஆரம்பத் தோற்றத்தை வைத்து பயணத்தை ஆரம்பிக்க முடியாது. முடிவில் பள்ளமா, குன்றா, குழியா என்பதில் தெளிவுள்ள சாரதியால்தான் இலக்கை எட்ட இயலும். இதுகூடத் தெரியாமல் சில முஸ்லிம் பிரபலங்களும் சிலரின் இப்தார்களில் கலந்து கொண்டன. இதனால் முஸ்லிம்கள் எளிதில் விலை போகும் சமூகத்தினர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் இவர்கள்.

தனிப்பட்ட சிலரின் ஏமாளி நடவடிக்கைகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. முஸ்லிம் சமூகம் என்ற லேபலைத் தாங்கிய சிலரின் இப்தார் சிந்தனைகள், கருத்துக்கள், கலாசார ஆடைகள் எல்லாம், விலைபோகாத அப்பாவி முஸ்லிம்களையும் இவர்களின் சமூகத்துக்குள் உள்ளடக்கி அபகீர்த்தியை ஏற்படுத்திற்று.

அரச தரப்பு இப்தாரையும், மஹிந்த தரப்பு இப்தாரையும் புறக்கணித்து தனித்துவ நிலைப்பாட்டில் நடந்திருந்தால், அடுத்த தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் பெறுமானமும், பேரம்பேசும் பலமும் பன்மடங்காகியிருக்கும். இதுதான் தெளிவுடனுள்ள சாதாரண முஸ்லிமின் நிலைப்பாடு.

பேருவளையில் கோத்தபாயவை வரவேற்;ற பக்கீர் பைத் இப்தாரும், கொழும்பில் மஹிந்தவும், காலியில் பஷிலும் நடத்திய இப்தார்களில் முஸ்லிம் தலைமைகள், பிரபலங்கள் பங்கேற்றமையும் பலரை வியப்பில் ஆழ்த்தியது. சிலரை விரக்திக்குள்ளும் திணித்தது. இவர்களின் ஆட்சியில் ஏற்பட்ட இழப்புக்கள், இழந்த உயிர்கள், உளரீதியான தாக்கங்களுக்கு இதுவா பரிகாரம்? இப்தாரா சகவாசம்? எம்மைவிட சர்வதேசமே இது பற்றி அதிகமாகச் சிந்தித்தது.

மாறி மாறி வரும் அரசாங்கங்களுடன் ஒட்டிக்கொண்டு சுவண்டிகளை அனுபவிக்கும் சில அரசியல் தலைமைகளுக்கு இது ஒரு பொருட்டில்லை, பெரிய விடயமுமில்லை.

இத்தனைக்கும் மஹிந்தவைத் தோற்கடிக்க வரிந்து கட்டிச் செயற்பட்டவர்களும் இவர்களே! இதற்கு முன்னர் ரணிலைத் தோற்கடிக்க மஹிந்தவுடன் கைகோர்த்தவர்களும் இவர்களே! எத்தனை பெரிய அரசியல் இலட்சியங்களையும் சுவையான விருந்து வழங்கி இவர்களிடம் விலை பேசலாம் என்ற எண்ணத்தையும் சில முஸ்லிம் பிரபலங்கள் ஏற்படுத்திவிட்டன. இதுதான் இன்றுள்ள கவலை. சமூகத்துக்காக அரசியல், அமைச்சுக்களைத் துறந்து பங்காற்ற முடியாவிட்டாலும், இப்தாரிலாவது கௌரவத்தைக் காப்பாற்ற முயன்றிருந்தால் வாக்களித்தோரின் மனச்சாட்சிகள் நிம்மதியுற்றிருக்கும். அரசியலில் எந்தச் சித்தாந்தமும் இன்றி, வட்டைக்கடை வியாபாரம் போலும், சீசன் பாவாக்கள் போன்றும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் முஸ்லிம் தலைமைகள், முஸ்லிம் அமைப்புக்களை சமூகத்துரோகிகளாக அடையாளம் காட்டுமளவுக்கு இவர்கள் பங்கேற்ற இப்தார்கள் பறைசாற்றுகின்றன.

நாட்டின் தேசிய தலைமைகளிடமிருந்து அற்ப ஆதாயங்களுக்காக முஸ்லிம்களைத் தூரப்படுத்தும் சில தலைமைகளும் தோலுரிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் மக்களின் பாதிப்புக்கள், மனநிலைமைகளை விட இவர்களின் அற்பத்தனமான தேவைகள், ஆசைகளே இவர்களுக்குப் பெரிதாகவுள்ளன. மஹிந்தவைப் பற்றி இவர்கள் முன்னெடுத்த பிரசாரங்களை நாம் சிந்தித்தால் ஆயுளுக்கும் ராஜபக்ஷக்களின் சகவாசம் ஹராமென்றே எண்ணத்தோன்றியது. அரசியலில் எது சரி? எது பிழை? என்று தலைமைகள் சொல்லி மக்கள் தெரிந்துகொண்ட காலம் இப்போதில்லை. இருந்திருந்தால் மஹிந்தவை விட்டு முஸ்லிம் தலைமைகளும், பிரபலங்களும் வெளியேறுவதற்கு முன்னரே முஸ்லிம்கள் வெளியேறியிருக்கமாட்டார்கள்.

இடையனா மந்தைகளை மேய்ப்பது?. அல்லது மந்தைகளா இடையனை மேய்ப்பது?. இதற்கும் இவர்களின் இப்தார் சிந்தனைகள் பதிலுரைத்துள்ளன.

இனிமேல் மந்தைகளால் மேய்க்கப்படும் இடையர்களாகவே இந்த முஸ்லிம் பிரபலங்களும், சில தலைமைகளும் திகழப் போகின்றன. வடக்கு – கிழக்கு இணைப்பு, பிரிப்பு, தனியலகு, கரைபோர மாவட்டம் எல்லாம் ஒரு விருந்துக்குள் கரைந்து விடும் அற்ப ஆயுளுடையது இந்த இடையர்களுக்கு. ஆனால் மந்தைகளோ பசித்தாலும், தாகித்தாலும் மொந்தை மாறுவதில்லை.

Related posts

அமைச்சர் றிஷாட்டை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம் சிங்கள அரசியல்வாதி

wpengine

மன்னாரில் வீட்டுத்தோட்ட புரட்சி ஆரம்பித்து வைத்த ஸ்ரான்லி டிமெல் -சமுர்த்தி பணிப்பாளர்

wpengine

பாடகர் இராஜ் விக்கிரமரத்னவின் கோரிக்கை ஒன்று! அமைச்சர் றிசாட் ஒரு இலட்சம் வேலை திட்டம்

wpengine