(எம்.ரீ. ஹைதர் அலி)
வைத்தியசாலைகளின் சேவை என்பது இன, மத, நிற ரீதியான அனைத்து விதமான பேதங்களுக்கும் அப்பால்பட்டதாகும். வைத்தியசாலைகளை பொறுத்தமட்டில் அது முஸ்லிம் பிரதேசத்தில் அமைந்திருப்பதனால் முஸ்லிம்களுக்குரியது என்றோ அல்லது தமிழ் பிரதேசங்களில் அமைந்திருப்பதனால் தமிழர்களுக்குரியது என்றோ வகைப்படுத்தி பார்க்க முடியாது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு அச்சு இயந்திரம் (Printer) வழங்கும் நிகழ்வு 2017.01.17ஆந்திகதி – செவ்வாய்க்கிழமை பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அச்சு இயந்திரத்தினை கையளித்து உரையாற்றிய போதே பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
வைத்தியசாலைகளில் பணிபுரிகின்ற வைத்தியர்கள் உற்பட ஏனைய ஊழியர்களாக இருந்தாலும் அல்லது வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தாலும் மருத்துவ சேவையில் எத்தகைய பாகுபாடுகளும் காட்டப்படுவதில்லை. அத்தகைய மிகவும் உன்னதமான மருத்துவ சேவையினை மேம்படுத்துவதில் நாங்கள் மிகவும் அக்கறையோடு செயற்பட்டு வருகின்றோம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் மாகாண சபையின் வருடாந்த அபிவிருத்திக்கென கடந்த 2016ஆம் வருடம் ஒதுக்கப்பட்ட 1200 மில்லியன் ரூபா நிதியானது இவ்வருடம் 3000 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இந்த நிதிகளின் மூலம் தேவையுடைய இடங்களுக்குரிய வேலைத்திட்டங்களை இனங்கண்டு பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவதோடு, அதனூடாக பல்வேறு வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்துவருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், அவ்வாறு வைத்தியசாலைகளில் பௌதீக ரீதியாக பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் வைத்தியசாலைகளுக்கான ஆளணிகளை பெற்றுக்கொள்வதில் பாரிய சவால்கள் காணப்படுவதனால் அந்த அபிவிருத்திக்கேற்ற வைத்தியசேவையினை வழங்குவதில் ஒரு சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் காணப்படுகின்றது.
நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு செல்கின்ற வைத்தியசாளைகளினுடைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் ஆளணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு மாகாண சபைகளுக்கு காணப்படுகின்ற போதிலும் முகாமைத்துவ சேவை திணைக்களம் மற்றும் நாட்டினுடைய திறைசேரி தொடர்பான சில இடர்பாடுகள் காரணமாக ஆளணிகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் காணப்படுகின்றது. இருந்தபோதிலும் முடியுமான அளவு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் இரண்டு தாதியர் பயிற்சி கல்லூரிகள் காணப்படுகின்றது. இத்தாதியர் கல்லூரிகளிலிருந்து பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறுகின்ற தாதியர்களை வெளிமாகாணங்களில் நியமிக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. அதனை இந்த வருடம் முதல் கிழக்கு மாகாணங்களிலிருந்து பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறுகின்ற தாதியர்களை இந்த மாகாணத்திலேயே நியமிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தினை கிழக்கு மாகாண சபை மூலமாக கொண்டு வந்திருக்கின்றோம். அதன் மூலமாக அதிகமான தாதியர்களை எமது மாகாண வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்தார்.