இலங்கை அரசியலின் இரு துருவங்களாக இந்நாள் ஜனாதிபதி மைத்திரியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் காணப்படுகின்றார்கள்.
இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை விடுக்கின்றார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதையும் அவ்வப்போது காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே கொழும்பு அரசியலில் ஒரு பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது ஜனவரி 3ஆம் திகதி ஜனாதிபதி வெளியிடவுள்ள சிறப்பு அறிக்கையும், ஜனவரி 2ஆம் திகதி மஹிந்த தெரிவிக்கப்போகும் முக்கிய அறிவிப்பும்.
இவர்கள் இருவரும் என்ன கூறப்போகின்றார்கள் என்பது தொடர்பில் அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்.
இதேவேளை, மஹிந்த தனது எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து இன்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்க உள்ளார்.
இவர்களது இரு அறிவிப்புகளும் என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் பல கருத்துக்கள் எழுந்துள்ளன.
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்துள்ள அறிக்கை, சுமார் 1400 பக்கங்களைக் கொண்டதாகவும், 70 பேர் சாட்சியமளித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான நிதி மோசடிகள் ஊழல்கள் தொடர்பான அறிக்கையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது.
பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கை சுமார் 1000 பக்கங்களைக் கொண்டமைந்தது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “தூய்மையான அரசியல் கலாச்சாரமொன்றை நாட்டுக்கு கொடுப்பதற்கு என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்பதை என்னால் கூற முடியாது” என ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.
ஒரு கையில் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை, மறு கையில் மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடி தொடர்பான அறிக்கை.
இந்த நிலையில், 3ஆம் திகதி சிறப்பு அறிக்கை. யார் தலையில் ஜனாதிபதி கை வைக்கப்போகின்றார். இவருடைய வாளுக்கு யார் இரையாகப் போகின்றார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இனி மஹிந்தவின் அறிவிப்பை பற்றி சற்று பார்த்தால்,
மஹிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வர் ரோஹித ராஜபக்சவினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன முனன்ணியின் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடும் 9000க்கும் அதிகமான வேட்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்த மஹிந்த, தனது எதிர்கால அரசியல் குறித்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.
ஆகவே இன்றைய நாள் மஹிந்தவுக்குரியது. ஆனால் நாளைய நாள் மைத்திரிக்குரியது. பார்ப்போம் கொழும்பு அரசியலில் என்னதான் நடக்கப்போகின்றது என்பதை பற்றி..