Breaking
Sat. Nov 23rd, 2024
(நேர்காணல் மகேஸ்வரன் பிரசாத்)

எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும் கவனயீர்ப்பு போராட்டமே. தீர்வொன்றை வழங்கக் கூடாது என கண்டியிலிருந்து பேரணி நடத்த முடியுமாயின் தீர்வொன்றை வழங்குங்கள் எனக் கூறி பேரணி நடத்துவதற்கு எமக்கு உரிமை இல்லையா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வியெழுப்பினார்.

வடக்கில் சிங்களவர்களை குடியேறவேண்டாம் என நாம் கூறவில்லை. நாம் எந்தவொரு மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. எனினும், எமது மக்களின் தனியார் காணிகளில் மேற்கொள்ளப்படும் பலவந்தமான பௌத்தவிகாரை அமைக்கும் செயற்பாடுகளையே எதிர்க்கின்றோம். தென்பகுதியில் உள்ள இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக எமக்கான உரிமையைக் கோராமல் இருக்க முடியாது என்றும் அவர் தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

எழுக தமிழ் பேரணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் முழுமையாக.

கேள்வி: எழுக தமிழ் மக்கள் பேரணி வெற்றியளித்துள்ளதா?

பதில்: தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் எழுக தமிழ் பேரணியை வெற்றியாகவே பார்க்கின்றனர். எழுக தமிழ் ஆரம்பிப்பதற்கு முன்னரே இது வெற்றியளிக்கும் என்பது தெளிவானது.  கிளிநொச்சி உட்பட வடக்கின் சகல பகுதிகளிலும் மக்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்து முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன், அவர்களாகவே பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். நீண்ட காலத்துக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஒன்றுகூடிய பேரணியென்றால் இதுவாகத் தான் இருக்கும்.

ஆரம்பம் முதலே நாம் தெளிவாகக் கூறியிருந்தோம், அதாவது அரசாங்கத்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ எதிரான போராட்டம் இது அல்ல எனச் சொல்லியிருந்தோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கவனயீர்ப்பு போராட்டமேயிது. சாதாரண மக்கள் மத்தியிலும் இது திருப்திதருவதாகவே காணப்படுகிறது. கடந்த தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்களும் அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்கள். அரசின்மீது எதிர்பார்ப்பு இருந்தபோதும், இலகுவில் செய்யக்கூடிய விடயங்கள் பலவற்றை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டபோதும் அவற்றை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை.

எமக்கு தென்பகுதியில் உள்ள அரசியல் நிலைமைகள் புரியாமல் இல்லை. இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக இவ்வாறான கவனயீர்ப்பொன்றுக்குச் செல்ல முடிவெடுத்தோம். அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்வதில் கவனம் எடுக்க வேண்டும். அரசியலமைப்புத் தயாரிக்கும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச தரப்பில் உள்ள அமைச்சர்கள் முன்னபின் முறனான கருத்துக்களைக் கூறிவருவதால் இதில் கூட திருப்தியற்ற தன்மை காணப்படுகிறது. சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்று கொடுக்கப்பட வேண்டும் என்பதே பல தசாப்தங்களாக தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.

இரண்டு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை நடத்துவதால் தற்பொழுது கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற அபிப்பிராயம் பலரிடம் உள்ளது. இந்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் இதற்குபிறகு நீண்டகாலத்துக்கு அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் பேரணியை நடத்தியிருந்தோம்.

கேள்வி: அரசாங்கம் சாதகமான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கும் நிலையில் இதனைக் குழப்பும் வகையில் எழுக தமிழ் பேரணி அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறதே!

பதில்: இவ்வாறான கருத்து தென்பகுதியில் இருக்கிறது. அப்படியாயின் தெற்கில் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியிருப்பதால் அதனை முன்னெடுப்பதற்கான உரிமை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறாயின் எமக்கு அந்த உரிமை இல்லையா?

இரண்டாவது விடயம், நாம் அதில் எடுத்தக் கொண்ட விடயங்களைப் பார்த்தால், பௌத்த விகாரைகள் அமைப்பது. நாம் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் பலாத்காரமாக தனிப்பட்ட மக்களின் காணிகளைப் பிடித்து அவற்றில் பலாத்காரமாக, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி பௌத்த விகாரைகள் அமைக்கப்படக்கூடாது என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். இது ஒரு பாரதூரமான விடயம். பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் முயற்சிகளே இவை. கும்பிடுவதற்கும் ஆளில்லை, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் கனகாம்பிகை குளம் அம்மன்கோவிலின் காணியை எடுத்து அதில் பௌத்த கோவில் அமைப்பது நியாயமற்றது. இதனை நாம் அமைதியாக எடுத்துச் சொல்கிறோம்.

இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. தென்பகுதியில் உள்ள சிங்கள இனவாதிகள் குழப்புவார்கள் என்பதற்காக நாம் எமது உரிமைகளைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்டே அவர்கள் செய்யாத நிலையில் கேட்காமல் இருக்கவும் இயலாது. நாங்கள் 60 வருடங்களுக்கு மேலாகக் கேட்டே வருகின்றோம்.

கேள்வி: எழுக தமிழ் பேரணியில் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாவும் கலந்துகொண்டிருந்தன. ஏன் தமிழரசுக் கட்சி இதில் கலந்துகொள்ளவில்லை?

பதில்:  அது.. நீங்கள் ஏற்கனவே சொன்ன காரணம்தான். தெற்கை குழப்பிவிடக்கூடாது என்பது. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் நிலைப்பாடுகள் இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. எனினும் தமிழரசுக் கட்சியில் அடிமட்டத்தில் உள்ள பலர் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக முடிவெடுத்திருந்தால் அதற்கு நாம் கட்டுப்பட்டிருப்போம். ஆனால் அவ்வாறான முடிவெதுவும் எடுக்கப்படவில்லை.

கேள்வி: உங்களுடைய இந்த முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடாதா?

பதில்: அப்படி ஒற்றுமையை குழப்பிவிடும் எனக் கூறமுடியாது. முடிவெடுத்தது நாம் அல்ல அவர்கள்தான். எம்மைப் பொறுத்தவரையில் ஒன்றைத் தெளிவாகக் கூறவேண்டும், அதாவது அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அதனை முன்கொண்டு செல்லவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 16 கூட்டமைப்பு உறுப்பினர்களின் பங்களிப்பு மிக மிக அவசியமானது. எமது கட்சியைப் பொறுத்த வரையில் இச்செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். எங்களுடைய நோக்கம் இதனைக் குழப்புவதல்ல.

மஹிந்த ராஜபக்ஷ கண்டி யாத்திரை சென்று தீர்வொன்றை கொடுக்கக் கூடாது என கோரமுடியுமாயின், தீர்வொன்றைக் கொடுங்கள் என நாம் ஏன் கூறமுடியாது? சிங்களப் பேரினவாதிகள் இப்படிச் செய்வார்கள் எமக்குத் தெரியும். ஆனால் தமிழ் தரப்புக்கள் உறுதியாக நிற்கின்றன என்பதை அரசாங்கத்துக்கு எடுத்தக் காட்டியுள்ளோம்.

கேள்வி: தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சீ.வி.கே.சிவஞானம் எழுக தமிழ் தொடர்பில் கருத்துக் கூறுகையில், தாம் இதைச் செய்யவிருந்ததாகவும், ஆனால் நீங்கள் அவசரப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதுபற்றி

பதில்: இதில் என்ன அவசரப்பட இருக்கிறது என்பது தெரியவில்லை. நீங்கள் செய்ய வேண்டுமாயின் செய்யுங்கள். கிளிநொச்சியில் சிறிதரன் இவ்வாறான பேரணியைச் செய்திருந்தார். இதுபோன்றதொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தினால் நாம் நிச்சயமாக முழு ஆதரவு வழங்குவோம்.

கேள்வி: தென்பகுதி அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கேட்கும் கேள்வி என்னவெனில், வடக்கிலிருந்து சிங்களவர்களைப் போகச் சொல்கிறீர்கள். அதேபோல கொழும்பில் உள்ள தமிழர்களைப் போகச் சொன்னால் என்படி இருக்கும் என்பதாகும். இதுபற்றி உங்கள் கருத்து

பதில்: நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் வடக்கிலுள்ள சிங்களவர்களை வெளியேறுமாறு கூறவில்லை. இதுவரை சொல்லவும் இல்லை சொல்லப்போவதும் இல்லை. அவர்கள் தாமாகவே வந்து குடியேறுவார்களாயின் அவர்களை நாம் போகச் சொல்ல மாட்டோம். வடக்கில் காணிகளை வாங்கி அவர்கள் அங்கு வசிக்க முடியும். வடக்கில் பாரம்பரியமாக பௌத்த விகாரைகள் இருக்கின்றன. இதனை நாம் எதிர்க்கவில்லை. ஏனெனில், நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எமது மக்களுடைய காணிகளை பலவந்தமாகப்பிடித்து சண்டித்தனம போன்று குடியமர்த்த முற்பட்டால் அதனை நாம் எதிர்ப்போம்.

ஏன் புலிகளின் காலத்தில் கூட வடக்கிலிருந்த பௌத்த விகாரைகள் எதுவும் சேதமாக்கப்படவில்லை. நாம் எந்த மதத்துக்கோ அல்லது இனத்துக்கோ எதிரானவர்கள் அல்ல. மாறாக பலவந்தமான திணிப்புக்களையே எதிர்க்கின்றோம்.

கேள்வி: தமிழரசுக் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து பதிவினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் கூறுப்படுகின்றன. அப்படியான நிலைப்பாடுகள் எதுவும் உள்ளதா?

பதில்: இது கட்சிகள் எடுக்கவேண்டிய முடிவாகும். எமது கட்சியைப் பொறுத்த வரையில் எந்தக் கட்சியைவிட்டுப் பதியவேண்டும் என்பதை விரும்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பாராளுமன்றத்தில் மிகவும் அவசியமாக உள்ளது. நான் ஏற்கனவே கூறியதைப் போல 16 பேரும் அரசியலமைப்பு தயாரிப்பில் முக்கிய பங்காற்றிவருகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழரசுக் கட்சி பிரிந்து தனித்தனியாக செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் நாம் ஆர்வம்காட்டவும் இல்லை, ஆர்வம்காட்டப் போவதுமில்லை. தேசிய பிரச்சினைக்கு சரியான தீர்வொன்று காணப்படவேண்டும். இதனைத் தீர்ப்பதற்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளனர். மக்களின் ஆணையை நாம் மீறமாட்டோம். கட்சிகளுக்கிடையில் பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கூட்டமைப்பை  விட்டுப் பிரிந்துசெல்லப்போவதில்லை.

கேள்வி: நடைபெறக்கூடிய உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாகத் தீர்மானித்தால் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

பதில்: அவர்கள் அப்படி சிந்தித்தால் அந்தநேரம் அது பற்றி நாம் யோசிப்போம். நாமும் நீண்டகாலமாக இயங்கிவரும் கட்சி என்ற அடிப்படையில் உரிய முடிவை அந்தநேரத்தில் எடுப்போம். இப்போது ஊகத்தின் அடிப்படையில் பதிலளிக்க முடியாது.

ஆனால், கிராம மட்டங்களில் இருக்கக் கூடிய தமிழரசுக் கட்சிக் கிளைகள் உள்ளூராட்சி தேர்தலுக்காக வேட்பாளர் தெரிவுக்குழுவை அமைத்து அதற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்கள் அதனைச் செய்தாலும் நாம் இதனை உடைத்துவிடக்கூடாது என்றே நாம் பார்க்கின்றோம். உடைக்க விடவும் கூடாது. நாம் மாத்திரமன்றி சம்பந்தன் அண்ணையும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்.

கேள்வி: இலங்கை தொடர்பான சர்வதேச நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது இலங்கைக்கு எந்தளவு சாதகமாக இருக்கும்?

பதில்: நாம் நடத்தியிருந்த எழுக தமிழ் பேரணி சர்வதேசத்துக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருக்கவில்லை. உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை சர்வதேசத்துக்க வழங்கியுள்ளார்கள். இதனை சர்வதேசத்துக்கான அழுத்தம் எனக் கூறமுடியாது. ஏன் எனில் இது அவர்களுக்கு புதிய விடயம் அல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தாம் உரிமைகளைக் கோரிநிற்கும் இனம் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம். சர்வதேசம் எனக் கூறும்போது அவர்கள் எப்போதும் தமக்கு சாதகமான அரசாங்கமொன்றை இங்கு வைத்திருப்பதற்கே விரும்புவார்கள். இதற்கு ஏற்றவகையிலேயே அவர்களுடைய காய் நகர்த்தல்களும் இருக்கும்.

கேள்வி: வடக்கிற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் விடயம் நீண்ட இழுபறிக்கு உள்ளாகியது. இதன் உண்மை நிலை என்ன?

பதில்: பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் விடயம் வடமாகாண சபையின் செயற்றிரணை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. வடமாகாண சபையினர் ஒருவிடயத்தை செய்ய முடியாதவர்களா என்ற கேள்வியை ஏற்படுத்திவிட்டது. ஆரம்பத்திலேயே அது சம்பந்தமாக நிபுணத்துவம் கொண்டவர்களைப் பயன்படுத்தி பொருத்தமான இடத்தைதெரிவுசெய்திருக்க வேண்டும். மறு பக்கத்தில் அரசதரப்பில் உள்ள சில அமைச்சர்கள் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலரை தம்பக்கத்துக்கு இழுத்துக் கொண்டதால் குழப்பம் வலுத்தது. இப்படி நடப்பதற்கு தலைமை விட்டிருக்கக் கூடாது. மக்கியமாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இணைந்து உறுதியான முடிவொன்றை எடுத்திருக்க வேண்டும்.

கேள்வி: வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு சமூக சீரழிவு நடவடிக்கைகள் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பின்னணியில் அரசியல் இருக்கின்றது எனக் கருதுகிறீர்களா?

பதில்: நீங்கள் சொன்னதைப் போன்று போதைப்பொருள் பாவனை, மதுபானப் பாவனை என்பன அதிகரித்துள்ளன. கடந்த காலத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும், இராணுவத்தினரும் திட்டமிட்டு இளைஞர்களை அழித்து வருவதாக கூறப்பட்டது. இதில் ஓரளவு உண்மையும் இருந்தது. எனினும், தற்பொழுது ஒருசில இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் ஒட்டுமொத்தமாக அவர்கள் மீது குற்றஞ்சுமத்தமுடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *