(ஊடகப்பிரிவு)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் குருணாகல் வாரியப்பொல, துத்திரிவௌ கிராமத்தில் மினி ஆடைத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான தொழில்வாய்ப்பை மேம்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த மினி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு, தையல் இயங்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆடைத்தொழிற்சாலையின் அங்குரார்ப்பன நிகழ்வு அண்மையில் இடம்பெற்ற போது குருணாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான அசார்தீன் மொய்னுதீன் கூறியதாவது, அமைச்சர் ரிஷாட் இன,மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாலே பணியாற்றி வருகின்றார்.
அந்தவகையில் சிங்கள மக்கள் வாழ்கின்ற இந்தக் கிராமத்தில் படித்துவிட்டு தொழிலின்றி, அவதியுறும் யுவதிகளுக்கு இந்த தொழில் முயற்சியை உருவாக்கி தந்துள்ளார். இதன் மூலம் அவர்களின் வாழ்வில் செழிப்பை ஏற்படுத்தி வருமையின் கோரப்பிடியிலிருந்து அவர்களை விடுவிப்பதே அமைச்சரின் எண்ணமாக இருக்கின்றது.
எனினும், இனவாதிகள் தமக்கு சார்பான ஊடகங்களைப் பயன்படுத்தி, அமைச்சர் ரிஷாட்டை சிங்கள சமூகத்தின் விரோதியாக காட்டமுயற்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும், போலி முகநூல்களிலும் இனவாதிகளும் நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பாத தீயசக்திகளும் அமைச்சர் ரிஷாட் தொடர்பான பிழையான கருத்தை நாளாந்தம் பரப்பிவருகின்றன. சில முகநூல்கள் அமைச்சரை விமர்சிப்பதற்கன்றே போலியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன.
நல்லாட்சியை ஏற்படுத்துவதில் சிறுபான்மை இனத்தின் சார்பாக முன்னின்று செயற்பட்ட அமைச்சர் ரிஷாட்டை அவர்கள் பழிவாங்கத் துடிக்கின்றனர் இதன் மூலம் நல்லாட்சியை சீர்குலைக்கும் நோக்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. எனவே, சகோதர சிங்கள மக்கள் இந்த இனவாத சக்திகளின் சதிவலைக்குள் சிக்குண்டு இனநல்லுறவை சீரழிக்க துணைபோகக்கூடாது என்றும் அசார்தீன் மொய்னுதீன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், சதொச பிரதி தலைவருமான நசீர், அமைச்சர் தெகிகம அவர்களின் பிரத்தியேக செயலாளர் முனிதாஸ உட்பட பலர் உரையாற்றினர்.