விக்கினேஸ்வரன் தமிழ், சிங்கள அடிப்படை வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து பிரச்சினைகளை சிக்கலாக்கும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். வடக்கில் இராணுவப் பிரசன்னம் படிப்படையாக குறைக்கப்படும். எதிர்காலத்தில் அங்கு அகதி முகாம்களுக்கு இடமில்லை. மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று சபை முதல்வரும், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அதேவேளை கடந்த கால காட்டு தர்பார் இல்லாதொழிக்கப்பட்டு சட்டத்தின் ஆதிக்கம் நாட்டுக்குள் நிலைநாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் புதிய நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களினதும், சிறுபான்மை மக்களினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து சம உரிமைகளை வழங்கியுள்ளது. அத்தோடு தமிழ், சிங்கள மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விசேட வேலைத்திட்டங்களை நாட்டில் முன்னேடுத்து வருகின்றனர்.
வடக்கில் ஒரு அகதி முகாம்கூட இருக்கக்கூடாது. மக்கள் அனைவரும் அவர்களது சொந்தக் காணிகளிலேயே மீள்குடியேற்றப்பட வேண்டுமென்பது தான் அரசின் கொள்கையாகும். அதற்கான அனைத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே அரசாங்கம் படிப்படியாக தமிழ் மக்களினது தேவைகளை நிறைவேற்றி வருகிறது.
மனித உரிமைகளை, அடிப்படை உரிமைகளை பாதுகாக்க விசேட திட்டங்களை முன்னெடுக்கின்றது. இதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். முப்பது வருடகாலம் யுத்தம் முடிவடைந்து தற்போது ஒருவருடகால காலப்பகுதிக்குள்தான் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற முடியாது.
வடமாகாண முதலமைச்சர் படித்தவர், பண்பானவர் அரசியல் வியூகம் தெரிந்தவர் என நினைத்தேன். ஆனால் தற்போதைய அவரது செயற்பாடுகள் கவலையளிக்கின்றன. இராணுவ முகாம்களை ஒரே நாளில் அடைக்கச் சொல்கிறார். அவர் வெ ளியிடும் கருத்துக்கள் தமிழ், சிங்கள அடிப்படை வாத இனவாதிகளுக்கு தீனி போடுவதாக அமைந்தள்ளன. அவர் நாட்டுக்குள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குகின்றார்.
முதலமைச்சரின் நடவடிக்கைகள் நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாகவே அமைந்துள்ளன. வடக்கில் படையினரை வைத்திருக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. அதேவேளை தேசிய பாதுகாப்பு தொடார்பிலும் அரசு கவனம் செலத்த வேண்டும். எனவே படிப்படியாக வடக்கிலிருந்து இராணுவம் வெ ளியேற்றப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி செயற்படுகின்றார். எதிர்க்கட்சித் தலைவருக்க அரசியல் வியூகமும் தாற்பரியமும், விட்டுக் கொடுப்பும் தெரிந்துள்ளது. அந்த அரசியல் நாகரீகம் விக்கினேஸ்வரனுக்கு தெரியாதது கவலையளிக்கின்றது என்றார்.