பல்லின மக்கள் வாழும் இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நாம் ஏனைய சமூகஙகளுக்கு முன்மாதிரியான நீதியான, நேர்மையை நேசிக்கும் சமூகமாக வாழ வேண்டும். முஸ்லிம் உம்மத் இன்று தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய சமூகமாக மாறியிருக்கிறது.
துன்பங்களும், துயரங்களும் சுமந்த ஒரு சமூகமாக இன்றைய முஸ்லிம் உம்மத் உலகளாவிய ரீதியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது
எமது இலங்கைத் திருநாட்டைப் பொருத்தவரையிலே பல நூற்றாண்டுகளாக சகல இன மக்களோடும் சினேகபூர்வமாக சகோதர வாஞ்சையோடு வாழ்ந்து முஸ்லிம் சமூகம்; வரலாறு படைத்திருக்கிறது.
இன்று சமாதானத்தையும், இனங்களுக்கிடையிலான சௌஜன்யத்தையும், சகவாழ்வையும் சிதைப்பதற்கான சூழ்ச்சிகளும், மறைமுக திட்டங்களும்;, சர்வதேசத்தைப் போன்று எமது நாட்டிலும் ஊடுருவ ஆரம்பித்திருக்கின்றன.
கடந்த காலங்களைப் போன்று தற்போதும் இனவாத சக்திகள் திரைமறைவில் இருந்துகொண்டு மதவாத்த்தையும், இனவாதத்தையும், குரோதத்தையும் கிளப்பி முஸ்லிம்களை அச்ச உணர்வுக்குள் தள்ளி வருகின்றன.
இனங்களுக்கிடையிலான குரோதத்தை வளர்த்து இந்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல சதி முயற்சிகள் அரங்கேறியும் வருகின்றன.
இந்த சவால்களுக்கு முகம்கொடுத்து சகல உரிமைகளோடும் வாழும் ஒரு சமூகமாக நாம் இலங்கையர் என்ற அடையாளத்தோடு எழுந்து நிற்க இந்த ஈத் திருநாளிலே உறுதி பூணுவோம்.