மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று 15-11-2016 செவ்வாய்க்கிழமை காலை நடாத்தப்பட்டது.
காலை 8.30மணியளவில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலக வாயில் கதவினை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொக்கட்டிச்சோலை-வெல்லாவெளி பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல காலமாக அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்களை குறித்த மதகுரு விடுத்துவரும் நிலையில் இதுவரையில் அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததனால் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்பாக அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதுடன் கீழ்த்தரமான வார்த்தைகளால் அதிகாரியை மதகுரு திட்டியபோது பொலிஸ் உயர் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததையும் காணமுடிந்தது.
இது இந்த நாட்டில் சட்ட நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன் நல்லாட்சி என்று சொல்லப்படுவதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனவே குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கவேண்டும் மற்றும் அவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அகற்றவேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் இதன்போது முன்வைத்தனர்.
குறித்த மதுகுரு மூலம் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சுதந்திரமான முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளும் நிலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், பொதுமக்கள், அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் டயர்களை எரிக்க முற்பட்டபோது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவற்றினை தடுத்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலையேற்றபட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஆர்ப்பட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.
அண்மையில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் அத்துமீறி சென்ற குறித்த பௌத்த பிக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியாவை தாக்க முற்பட்டதுடன் பிரதேச செயலகத்தினையும் சேதப்படுத்தியிருந்தார்.
அதற்கு எதிராக இன்றுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், குறித்த பிரதேச செயலாளரை இடமாற்றும் நடவடிக்கையே எடுக்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதன்போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் சிசிர தெத்ததந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் பிரதேச செயலக நடவடிக்கைகளும் ஆரம்பமானது.