Breaking
Sun. Nov 24th, 2024
ஊடகப்பிரிவு
இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? அல்லது சிறுபான்மை இனத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல், கால்லேகமவில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம் சமூகத்தின் மீது இனசங்காரம் செய்தவர்கள், எந்தக் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது  உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், மூன்று வாரங்கள் கழித்து எதுவுமே அறியாத, எந்தப் பிரச்சினையிலும் சம்பந்தப்படாத குருநாகல் மாவட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய கொடியவர்கள், எந்தக் கூடாரத்துக்குள் சங்கமித்துள்ளார்கள் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே. அந்தப் பயங்கரவாத செயலுடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி, அவர்களை புண்படுத்திய இனவாதக் கட்சிகளின் தலைவர்களும் வங்குரோத்து அரசியல்வாதிகளும் தற்போது எந்த வேட்பாளருடன் கைகோர்த்துள்ளார்கள் என்பதும் நமக்கு நன்கு தெரியும். இவை அனைத்தும் தெரிந்த பின்னரும், அவர்கள்தான் நாசகார செயலுக்கு மூலகர்த்தாக்கள் என, நாம் தெளிவாக அறிந்த பின்னரும் அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளரை முஸ்லிம் சமூகம் ஆதரிக்க வேண்டுமா? என உங்கள் நெஞ்சைத் தொட்டு கேட்டுப் பாருங்கள்.

கடந்த காலங்களிலும் அண்மைய காலங்களிலும் நமது சமூகத்தின் மீது அட்டூழியங்கள் நடந்தபோது, அதனை தட்டிக் கேட்காதவர்களும், வன்செயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வந்து, மக்களை எட்டிப் பார்க்காத நம்மவர்கள் சிலரும் இப்போது மொட்டுக் கட்சிக்காக, முஸ்லிம் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை இரந்து கேட்கின்றார்கள். கெஞ்சுகின்றார்கள். ஆசை வார்த்தைகளை கூறுகின்றார்கள். சில இடங்களில் அச்சுறுத்தல் பாணியில், “எதிர்காலம் சூனியமயமாகிவிடும்” என்று கூறி வாக்குப் பிச்சை கேட்கின்றார்கள்.

விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும், எஸ்.பி. திஸாநாயக்கவும் கோட்டாபய ராஜபக்ஷதான் வேட்பாளராக வரவேண்டுமென்று அடம்பிடித்ததும் அவரைதான் ஜனாதிபதியாக்க வேண்டுமென்று கங்கணம்கட்டித் திரிவதும் எதற்காக? அதிகாரம் கிடைத்த பின்னர், முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் சமூகத்தின் விழுமியங்களையும் இல்லாமல் ஆக்குவதே இவர்களின் திட்டமிட்ட நோக்கமாகும்.

குருநாகலில் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், வீடுகள் தாக்கப்பட்டபோது, இவர்கள் ஏன் இந்த அட்டகாசத்தை செய்கின்றார்கள்? என்று நமக்குத் தெரியாது. அதேபோன்று, இந்தத் தாக்குதலை நடத்தியவர்களுக்குக் கூட சிலவேளை அது தெரிந்திருக்காது. ஏனெனில், சூழ்ச்சிக்காரர்கள் தொலைவிலிருந்து இந்த அழிவை மிகவும் கச்சிதமாக நடத்தி முடித்தார்கள்.

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகள் பெருவாரியாக இருந்தபோதும் கடந்த தேர்தலில், துரதிஷ்ட வசமாக முஸ்லிம் ஒருவரை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. நமது வாக்குகள் மிகவும் பெறுமதியானது. அந்தவகையில், இனி வரும் தேர்தல்களில், நாம் புத்திசாதுரியமாகவும் தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட வேண்டும்.

அதேபோன்று, நாட்டுக்கு சரியான ஒரு தலைவரை, சிறுபான்மை மக்களை மிகவும் நேசிக்கும் தலைவரை, சிறுபான்மை மக்களையும் பெரும்பான்மை மக்களையும் சமமாக நடாத்தும் தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்குப் பொருத்தமானவர் சஜித் பிரேமதாச என்பதை நாம் அடையாளங்கண்டுள்ளதால் அவருக்கு வாக்களித்து, அவரை வெற்றிபெறச் செய்வோம்” என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான  நசீர், பிரதேச சபை உறுப்பினர்களான இர்பான், அன்பஸ் அமால்டீன், சபீர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *