Breaking
Sun. Nov 24th, 2024

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டுமென்று குரல் கொடுப்பவர்கள் இன்னுமொரு சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கும் விதத்தில் செயற்படக்கூடாது. பாராளுமன்ற உறுப்பினரொருவர் எப்போதுமே எந்த விடயத்தையும் வேற்றுக்கண்ணோட்டத்துடன் நோக்கி இனவாதமாகப் பேசுவதையே தமது தொழிலாகக் கொண்டு நடந்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பாராளுமன்றில் நேற்று (24) தெரிவித்தார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நிருவாகத்தின் கீழான அமைச்சுக்கள், கமத்தொழில் அமைச்சுக்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக தூர்ந்து போன அகத்திமுறிப்புக் குளம், வியாயடிக்குளம் ஆகியவற்றை புனரமைப்பதற்காக நீர்ப்பாசன அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

முசலிப் பிரதேசத்திலுள்ள அகத்திமுறிப்புக் குளம், வியாயடிக்குளம் ஆகியவற்றைப் புனரமைப்பதன் மூலம் மன்னார் மாவட்ட விவசாயச்செய்கையை மேம்படுத்த முடியும். அந்த வகையில் இந்தக் குளங்களை பரிபாலிப்பதற்காக பிரதான பொறியியலாளர் அலுவலகமொன்றையும், நிர்வாகப் பொறியியலாளர் அலுவலகமொன்றையும் அமைத்துத் தருமாறு நாம் கோரிக்கை விடுத்தோம். இந்தக் குளங்களைப் புனரமைப்பதின் மூலம் சகல விவசாயிகளும் நன்மையடைவர். எனினும் இந்தக் கோரிக்கையை இனவாதமாக நோக்கி இதனை தடுக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த உயர் சபையில் கருத்து வெளியிட்டமை வேதனையானது. அவரது தெளிவின்மையை அது காட்டுகின்றது.

நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சாவின் இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்ட மல்வத்து ஓயாவுக்கும் அம்பாறை மாவட்ட ஹெட் ஓயாவுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மல்வத்து ஓயாவை அபிவிருத்தி செய்வதன் மூலம் மன்னார் மாவட்டமல்ல, வவுனியா, அனுராதபுர மாவட்ட விவசாயிகளும் பாரிய நன்மை அடைவர். அதே போன்று சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் பொத்துவில்லில் இருந்து காலஞ்சென்ற சதகத்து ஹாஜியார் தலைமையில் நாம் அழைத்து வந்த குழுவை அமைச்சர் விஜிதமுனி சொய்சா பாராளுமன்றில் சந்தித்து ஹெட் ஓயா திட்டத்தை புனரமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தவாறு இவ்வருடம் அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். அமைச்சருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே போன்று நானாட்டானிலுள்ள கட்டுக்கரைக் குளத்தையும் பாலியாற்றையும் அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாயத்துறையை மேம்படுத்தமுடியுமென நம்புகின்றோம். எனவே இவற்றையும் புனரமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நமது நாட்டிலே சுமார் 6,25000 ஏக்கர் வயல் நிலங்கள் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 14 நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள் இருக்கின்றனர் ஆனால் 1,50000 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் ஒரு பணிப்பாளர் இல்லாத குறை நிலவுகின்றது. எனவே அந்த மாவட்டத்தில் கரையோர நீர்ப்பாசன பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த உயர் சபையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அமைச்சுக்களில் ஒன்றான சுற்றாடல் வன வள பிரதியமைச்சர் அனுராதா ஜயரத்னா அவர்களும் இருக்கின்றார்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீண்டும் 20 வருடங்களுக்கு பின்னர் தமது சொந்த இடங்களுக்கு சென்ற போது அவை காடாகிக் கிடந்தன. மக்கள் வாழாத பிரதேசம் காடாகிப் போவது வழமையே. ஆனால் இந்தப் பிரதேசங்களான மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி ஆகியவை வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வனவளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், காணிச்சொந்தக்காரர்கள்ஆகியோரின் எந்தவிதமான கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த வர்த்தமானிப் பிரகடனத்தை மீள்பரிசீலனை செய்து காணிச்சொந்தக்காரர்களுக்கு காணிகளை கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *