இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் ஹக்கீமும் இருப்பது முஸ்லிம்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய ஆபத்தானதாகும் என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்தார்.
கட்சிக்காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,ரஊப் ஹக்கீம் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்து இந்த 16 வருடங்களுள் முஸ்லிம் சமூகம் எந்தவொரு உரிமையையும் பெறவில்லை என்பதுடன் குறிப்பிடத்தக்க சேவையையும் பெறவில்லை.
அதற்கு மாறாக முஸ்லிம் சமூகம் தனக்கென இருந்த பல உரிமைகளை இழந்;ததுதான் கண்ட மிச்சமாகும்.இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு ஒஸ்லோவில் ஆரம்பித்த போது அப்போதைய பாராளுமன்றத்தில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் இருந்தனர்.
அன்றைய அரசாங்கத்தை நிலைநிறுத்திய அச்சாணியாக மு. கா இருந்தது. அத்தகைய நல்ல சந்தர்ப்பத்தில் நடைபெற்ற இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளின் போது அரச தரப்பாக அன்றி முஸ்லிம் தரப்பாக கலந்து கொள்ளும்படி நான் அமைச்சர் ஹக்கீமுக்கு பல கடிதங்கள் எழுதினேன்.
ஹக்கீம் அதனை ஏற்று முஸ்லிம் தரப்பாக அன்று கலந்து கொண்டிருந்தால் இன்று முஸ்லிம்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஏற்கப்பட்ட மூன்றாவது தரப்பாக இருந்திருப்பதோடு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும். அத்தகைய நல்லதொரு சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே தவறவிட்டு விட்டு, தான் அரச தரப்பாகவே கலந்து கொள்ளப்போகிறேன் என மடத்தனமாக கூறியவர்தான் ஹக்கீம்.
அதன் காரணமாக அந்த வேளையில் காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண உலமாக்களுக்கான கூட்டத்தில் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் துரோகி என நான் பகிரங்க மேடையில் கூறினேன். அன்று நான் கூறியதை ஏற்காத மௌலவிமார் இன்று எனது கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். எனது அக்கருத்து இன்று வரையான அனைத்து ஹக்கீமின் செயற்பாட்டிலும் உண்மையாகி வருவதை நடுநிலையாளர்கள் காணலாம்.
ஆகவே ஹக்கீம் இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் இருப்பது முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வை தருவதற்கு பதிலாக ஆபத்தையே தரும் என்பதை எச்சரிக்கிறோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சில் நிச்சயம் ஹக்கீம்; வடக்கு கிழக்கு இணைப்புக்கு கை தூக்கி முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் தள்ளுவார்.
ஆகவே அவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையிலிருந்து நீக்க வேண்டும் என கிழக்கு புத்திஜீவிகள் குரல் எழுப்ப வேண்டுமென உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது