கடந்த 07-05-2016 சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து 7.30 மணிக்கு மன்னார் நோக்கிப் புறப்பட்ட தனியார் பேரூந்தும், 7.45 மணிக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தும் மன்னார் பாலியாற்றுப்பகுதியில் காலை 9.25 மணிக்கு சமாந்தரமாக போட்டிபோட்டு ஓடிக்கொண்டிருந்த வேளை, அவ்வீதியால் பயணம் செய்த வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் இரண்டு பேரூந்துகளையும் நிறுத்தி, விசாரித்த வேளையிலே மேற்கூறியவாறு 15 நிமிட இடைவெளியில் தங்களது பயணத்தை ஆரம்பித்த இரண்டு பேரூந்துகளும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு ஓடி வந்திருப்பதும், அவர்களது அசமந்தப்போக்கையும் குறித்துக் கண்டித்ததோடு, இவ்வாறான செயற்பாட்டால் பயணிகளுக்கோ, பேரூந்து உரிமையாளர்களுக்கோ அல்லது இலங்கை போக்குவரத்து சபைக்கோ எந்த இலாபமும் கிடைக்கப்போவதில்லை.
என்றும், இவ்வாறான செயற்ப்பாட்டால் பயணிகளே பேரூந்து இல்லாமல் அதிக நேரம் காக்கவேண்டிய சூழ்நிலை உருவாகுவதாகவும், ஆகவே இவ்விரண்டு போக்குவரத்து வழங்குனர்களும் கொடுக்கப்படும் நேரத்தை கருத்தில் கொண்டு செயற்படுவார்கள் எனில் ஒரு பேரூந்தை இழக்கின்ற பயணிகள் நிச்சயமாக அடுத்த பேரூந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு பேரூந்து உரிமையாளர்களுக்கும் ஓர் கணிசமான இலாபம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இவ்வாறான போட்டிக்கு ஓடுவதனால் பாரிய பின் விளைவுகளான விபத்துக்களையும் உயிர்ச் சேதங்களையுமே உருவாக்குவதாகவும், இவ்வாறு பல உயிர்கள் இதுவரையில் வடக்கில் விபத்தால் இழக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்ததோடு, தொடர்ந்தும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கான இணைந்த நேர அட்டவணை அமுல்ப்படுத்தப்ப்படும் போது இவ் நேர கணிப்பு பிரதானமாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும், மீறுகின்ற சாரதிகள் நடத்துனர்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்ததார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பேரூந்துகளில் பயணித்த பயணிகளை விசாரித்த வேளை அவர்களும் மிகவும் அசமந்தப்போக்கில் காரணங்களைச் சொல்லி சாரதிகளை காப்பாற்ற நினைப்பதையும் காண முடிந்ததாகவும், இது நிச்சயமாக ஓர் அசௌகரிய நிலையை எதிர்காலத்தில் கொண்டுவரும் என்றும். பயணிகள் இவ்வாறான சம்பவங்களில் விழிப்பாக இருந்து, விபத்துக்கள் வருமுன் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
என்றும், விபத்து சம்பவம் இடம்பெற்ற பின்னர் இவைகளைக் கதைப்பதில் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்துகொண்டு இனி வரும் காலங்களில் விழிப்புடன் செயற்ப்பட்டு இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அல்லது சாரதிகளை வினவி தங்களுடைய போக்குவரத்தை பாதுகாப்பாக அமைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.