Breaking
Mon. Nov 25th, 2024

“நாட்டின் சட்ட ஆட்சி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் கைது எடுத்துக்காட்டாகும்” – முன்னாள் எம்.பி சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்!

“நாட்டின் சட்ட ஆட்சி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பது, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைது மூலம் தெளிவாகின்றது. இந்த அநியாயமான கைது வேதனைக்கும், கண்டனத்திற்குமுரியது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் குறிப்பிட்டார்

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“புனித ரமழான் மாதத்தில், தஹஜ்ஜத்துடைய தொழுகையை நிறைவேற்றுகின்ற நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்றத்தின் உத்தரவையோ பெறாமல், பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி, பாரிய குற்றவாளியைப் போல் கைது செய்யப்பட்டதை அடுத்து வேதனை அடைகின்றேன்.

இவ்வாறான நடவடிக்கைகள் மிக்க முறைகேடானவைகள். இவை அரசியல் உள்நோக்கம் கொண்ட கைதுகளாக பார்க்கப்படுகிறது. இவ்வாறான கைதுகளின் மூலம் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் முன்னர் கைது செய்யப்பட்டு, குற்றமற்றவர் என்ற நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவ்வாறு இருக்க இப்போது நடைபெற்றிருக்கின்றன கைது, பேரினவாதிகளை சந்தோஷப்படுத்துவதற்கும், அரசின் மேல் அதிருப்தியடைந்திருக்கின்ற மக்களை திசை திருப்புவதற்குமான கைதாக பார்க்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உண்மையான சூத்திரதாரியை மூடிமறைத்து, மேல்மட்டத்தில் ஏற்படுகின்ற அழுத்தங்களை குறைப்பதற்காகவும், சம்பந்தப்படாதவர்களை கைது செய்து, உண்மையை மூடி மறைப்பதற்கான செயற்பாடுகளாக இக்கைது பார்க்கப்படுகிறது.

மேலும், இதுபோன்ற செயற்பாடுகளினால்
பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் “முஸ்லிம்கள் தீவிரவாதிகள். எமக்கு எதிரானவர்கள்” என்ற எண்ணங்களை உருவாக்க தூண்டும். எதிர்காலங்களில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு, முஸ்லிம் சமூகத்தின் மீது பாரிய அச்சத்தையும் வெறுப்புணர்வையும் மேலும் அதிகரிப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகள் தூண்டப்படுகிறன.

தேர்தல்களை நோக்கமாகவும், தனது சுய இலாபங்களை நோக்கமாகவும், பாரிய பிழையை மூடிமறைக்க தயார் செய்யப்பட்ட நாடகமாகவுமே இவ்வாறான கைதுகள் பார்க்கப்படுகிறன.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், இளம் கவிஞர் அஃனாப் ஜெசிம் ஆகியோரின் கைதுகள் மிக அநியாயமானவை. அஃனாப் ஜெசிம் நவரச கவிதை புத்தகம் எழுதியமைக்காக அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டு, “ஜாமியா நளீமியா தனக்கு தீவிரவாதத்தை போதித்தது” என்று வற்புறுத்தி, பல குற்றங்களை திணிப்பதற்க்கு முனைவதாக அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

பயங்கரவாத குற்றங்களோடு சம்பந்தப்படுத்தி, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும், முஸ்லிம் சமய தலைவர்களையும் பழிவாங்கும் நோக்கங்களோடு இவ்வாறான கைதுகள் மேற்கொள்ளப்படுவது மிக வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் நற்பெயரை கலங்கபடுத்துவதோடு, நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

ரிஷாட் பதியுதீன் எம். பி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது மிக வேதனை அளிக்கிறது” என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *