பிரதான செய்திகள்

இந்து,கத்தோலிக்க,முஸ்லிம் என்ற பேதமின்றி வாழும் மக்களை பிரிக்க சில அரசியல்வாதிகள் முயற்சி மன்னாரில் அமைச்சர் றிஷாட்

(சுஐப் எம் காசிம்)

அரசியல்வாதிகள் சிலரின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளினாலேயே இனங்களுக்கிடையே பிரிவுகள் ஏற்பட்டு முரண்பாடுகளும் பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இளைஞர் கழகங்களின் மாவட்ட சம்மேளன நிர்வாகிகள் தெரிவு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று காலை இடம்பெற்ற போது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  அமைச்சர் கலந்து கொண்டார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவைகள் அலுவலர் கிருபை ராஜா, மாவட்ட சம்மேளனத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

இனவாதம், பிரதேசவாதம் மற்றும் மதவாதங்களால் குறிப்பிட்ட சிலரே வெற்றிபெறுகின்றனரே ஒழிய இதனால் சமூகம் தோல்வியைத்தான் சந்திக்கின்றது.

மண்ணுக்காக போராடுமாறு வழி காட்டிய அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக நமது தமிழ் இளைஞர்கள் கழுத்திலே சயனைட் குப்பிகளைக் கட்டிக் கொண்டு ஆயுதங்களைத் தூக்கி தமது உயிர்களை மாய்த்த வரலாறுகளை நாம் மீட்டுப் பார்க்கின்றோம்.

அரசியல் தலைமைகளின் எழுச்சிக் கோஷங்களினாலும் வீரப் பிரதாப் பேச்சுக்களினாலுமே நமது இளைஞர்கள் ஆயுத வழிக்குள் பிரவேசித்தனர். மன்னார் மாவட்ட இளஞர்கள் இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை.

இந்த மாவட்டத்திலே பிறந்த விக்டர் போன்ற இளைஞர்கள் தமது உயிரை அநியாயமாக மாய்த்துள்ளனர்.

பிள்ளைகளைப் பெற்றெடுத்த எத்தனையோ தாய்மார்கள் அவர்களைப் பலி கொடுத்ததனால்  நோயிலும் துன்பத்திலும் துவண்டு கொண்டிருக்கும் பரிதாப நிலையை நாம் காண்கின்றோம். யாரும் இல்லாத அநாதைகளாக அவர்கள் வாழ்கின்றனர்.

யுத்தம் நமக்கு விட்டுச்சென்ற வடுக்களும் வலிகளும் சொல்ல முடியாதவை. இந்து, கத்தோலிக்க, முஸ்லிம் என்ற பேதமின்றி வாழ்ந்த இந்த பிரதேச மக்களை அதை பிரித்து வைத்ததுடன் விரோதிகளாகவும் பார்க்க வைத்தது.

சமாதானம் ஏற்பட்டு மீண்டும் இன ஒற்றுமை தழைத்து வரும்போது இனவாதத்தை உசுப்பி பதவிக் கதிரையை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக ஒரு சிலர் அலைகின்றனர்.

யுத்தத்தினால் கை கால்களை இழந்த பலரின் பரிதவிப்புக்கள் வேதனை தருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 15000 புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போதும் அவர்களும் இன்னும் துன்பத்திலே தான் வாழ்கின்றனர்.

யுத்தம் முடிந்து அமைதி ஏற்பட்ட போது துன்பப்படுபவர்களுக்குக் கை கொடுக்க யாருமே அப்போது வரவில்லை. மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பு என்னிடமிருந்ததால் முட்கம்பியில் முடங்கிக் கிடந்தவர்களை மீண்டும் குடியேற்ற முடிந்தது.

முல்லைத்தீவிலும் மன்னாரிலும் வவுனியாவிலும் தகர்ந்து கிடந்த கட்டிடங்களையும் பாடசாலைகளையும் எம்மால் புனரமைக்க முடிந்தது. மீளக்குடியேறிய முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு மட்டும் 15000 வீடுகளை கட்டி வழங்கியுள்ளோம்.

குளங்கள், பாலங்கள், காபட் வீதிகள் ஆகியவற்றை யாருமே நினைத்துப் பார்க்காத அளவில் மிகக்குறுகிய காலத்தில் அமைத்துக் கொடுத்தோம். மின்சாரம் இல்லாத இந்தப் பிரதேசத்தில் எல்லோருக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்தோம்.

எமக்குள் எந்தப் பிரிவினைகளும் இனி வரவே கூடாது. பிரச்சினைகளை பேசித்தீர்த்தால் முரண்பாடுகளும், சண்டைகளும் தொடராது. அதே போன்று பெரும்பான்மையாக வாழ்வோர் சிறுபான்மையினரின் கௌரவத்தை மதிப்பார்களாக இருந்தால், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழி விடுவார்களாயிருந்தால் நாட்டிலே சுபீட்சம் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட்

wpengine

இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

Editor

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான T20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!

Editor