2018 ஆம் ஆண்டில் நடைபெறும் ஒரு வருட கால பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி (உள்வாரி) முழுநேரப் பாடநெறியைத் தொடருவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பாடநெறி கொழும்பு, பேராதனை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மாத்திரம் நடைபெறும்.
இந்த பாடநெறி கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலத்திலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி மூலத்திலும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலத்தில் மாத்திரம் நடத்தப்படவுள்ளது.
பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற 50 வயதுக்கு உட்பட்ட ஆண்,பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் தற்போது இலங்கை ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகியவற்றில் ஒரு சேவையிலிருந்தல் வேண்டும்.
எதிர்வரும் 22 ஆம் திகதி குறைந்தது ஒரு வருட கால சேவையைப் பூர்த்தி செய்தவராக இருத்தல் அவசியம்.
கற்பித்தலில் தேசிய டிப்ளோமா நியமனம் பெற்ற ஆசிரியர்கள் குறித்த திகதியில் 5 வருடசேவையைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
சகல பரீட்சார்த்திகளும் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றுதல் வேண்டும். அதில் பெறும் புள்ளிகளுக்கமைவாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இந்த எழுத்துப் பரீட்சைகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் மாத்திரம் நடத்தப்படும்.
பொது அறிவு, பொது உளச்சார்பு ஆகிய இரு பாடங்கள் பரீட்சிக்கப்படும். பரீட்சைக் கட்டணம் 900 ரூபா.விண்ணப்ப முடிவுத் திகதி 22.09.2017ஆகும்.
மேலதிக விபரங்களுக்கு 31.08.2017 அரச வர்த்தமானி அறிவித்தலில் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்டுகின்றது.
மும்மொழிகளிலும் இந்த அவறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில் மொழி வாசகங்களில் ஏதேனும் ஒத்திருப்பின்மைகள் இருப்பின் சிங்கள மொழி மூல வாசகங்களே இறுதியானவையாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.