Breaking
Sat. Apr 20th, 2024

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் கட்சிகளும், அதன் பிரதிநிதிகளும் “இணைந்த வடகிழக்கு எங்கள் தாயகம்” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வருவதுடன், அதற்காக பல தியாகங்களையும் செய்துள்ளனர். இது அவர்களது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

ஆனால் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களாகிய நாங்களும் ஒரு தனித்துவ தேசிய இனம். அவ்வாறான எங்களது கொள்கை என்ன ? முஸ்லிம்களின் அரசியல் இலக்கு என்ன ?  

அபிவிருத்தி என்றபோர்வையில் கட்டிடம் கட்டுவதும், வீதிகள் போடுவதும், அதன் மூலம் சில வர்க்கத்தினரால் பெறப்படுகின்ற தரகுப் பணத்தைக்கொண்டு கோடிகள் சம்பாதிப்பதும்தான் முஸ்லிம்களின் இலக்குகளா ?  

“வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமா ? வேண்டாமா ?” என்று ஏன் எங்களது கொள்கையினை தெளிவாக கூற முடியவில்லை ?

கொள்கையினை உறுதியாக கூறி அதன்படி பயணிப்பதற்கு இடுப்பில் பெலப்பும், முள்ளன்தண்டின் உறுதியும் வேண்டும்.

தூர நோக்கில் சிந்திக்காமல், பிராந்திய ஆதிக்கத்தை நிலைநிறுத்த நினைக்கின்ற வெளிநாடுகளிடமும், தாங்கள் ஆதரவு வழங்குகின்ற தேசிய கட்சிகளிடமும் “தேர்தல் செலவு, கட்சி செலவு” என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு ஆடம்பரம் காட்டுகின்ற கோடீஸ்வர அரசியல்வாதிகள் பற்றி அரசியல் அறிவில்லாத அப்பாவி முஸ்லிம்களுக்கும், அரசியல்வாதிகளின் அல்லக்கைகளுக்கும் என்ன புரியப்போகின்றது ?    

தேர்தல் வந்தால் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக வெற்றுக் கோசம் எழுப்புவதும், பின்பு பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவதும்தான் முஸ்லிம்களின் அரசியலா ? இது எவ்வளவு காலங்களுக்கு இந்த ஏமாற்று ? இன்று மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழர்களின் அரசியலில் கோழைத்தனமும், வெற்றுக்கோசமும், கொள்கையற்ற நிலைப்பாடுகளும், ஆடம்பர பகட்டுக்களும் காணப்படவில்லை.   

வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும் என்று தனது கட்சி கொள்கையினை சாணாக்கியன் கூறுவது போன்று எமது அரசியல் தலைமைகளும் தங்களது நிலைப்பாடுகளை உறுதியாக கூறினால் அதன் பின்னால் நாங்களும் பயணிக்கலாம். ஆனால் முஸ்லிம் மக்களிடம் ஒன்றும், தமிழ் தரப்புக்கு இன்னுமொன்றும், தேசிய கட்சிகளிடம் வேறு ஒன்றையும் கூறிக்கொண்டு காலத்தை கடத்துகின்ற எங்களது அரசியலில் மாற்றம் வர வேண்டும். உறுதியான கொள்கை வேண்டும்.

அவ்வாறில்லாமல் வடகிழக்கு இணைய வேண்டுமென்று சாணாக்கியன் கூறியுள்ளார் என்று அவரை நாங்கள் விமர்சிப்பது எங்களது அறியாமையும், முட்டாள்தனமும் இரண்டர கலந்த நிலைப்பாடாகும்.

சாய்ந்தமருது   

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *