(ஊடகப்பிரிவு)
மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை (11.09.2017) மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் அவர்களின் வழிநடத்தலில் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண அமைச்சர்களான கந்தையா சர்வேஸ்வரன், ஞானசீலன் குணசீலன், அனந்தி சசிதரன் மற்றும் உறுப்பினர்களான லிங்கநாதன், ஜெயதிலக, ஆகியோரும் பங்கேற்றனர்.
இங்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தீர்வு காணப்பட்டன.
வவுனியா குப்பைபிரச்சினை, குடியிருப்புக்களிலும், மக்கள் வாழ்ந்த இடங்களிலும் வனபரிபாலன திணைக்களம் அத்துமீறி, எழுந்தமானமாக எல்லைகளை நாட்டியமை காணிகளை விடுவிப்பதில் அபிவிருத்தி குழுக்கூட்டம் மேற்கொண்ட முடிவுகளை இழுத்தடிப்புச் செய்யும் வகையிலான வனபரிபாலன திணைக்களத்தின் செயற்பாடுகள் வவுனியா பஸ்தரிப்பு நிலையம் தொடர்ந்தும் திறக்கப்படாது, மூடிக்கிடக்கும் பரிதாபம் குறித்து மக்களின் பிரதிநிதிகள் எடுத்துக்கூறினர்.
இணைத்தலைவர்கள் இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளாவிட்டால் மக்களே பாதிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அங்கு கருத்துக்களை வெளியிட்டனர்.
வவுனியா பஸ்தரிப்பு நிலையம் இயங்காமல் இழுபறி நிலைக்கு உள்ளாகிய விடயம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் கருத்து தெரிவிக்கும் போது,
இலங்கை போக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்துக்காரர்களும் இந்தப் பிரச்சினையை இனிமேலும் நீடிக்கவிடாமல் கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டும். முதலமைச்சரே தற்போது போக்குவரத்து அமைச்சராக செயற்படுவதால் அவர் இரண்டு பிரிவினரையும் எதிர்வரும் 14ம் திகதி அழைத்திருக்கும் கூட்டத்தில் இரண்டு பிரிவினரும் பங்கேற்று இந்தப் பிரச்சினைக்கு சுமூகமுடிவு காணவேண்டும் என்றார்.
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் வாழும் குடியிருப்பை அண்டிய பிரதேசத்தில் தொடர்ந்தும் குப்பைகொட்டுவதை விடுத்து மக்கள் பாதிப்பு இல்லாத வேறு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான காணியை அவசரமாக விடுவித்துக்கொடுக்குமாறு வனவள அதிகாரிகளை அமைச்சர் பணித்தார். இந்தக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு 10ஏக்கர் காணியை விடுவித்து தருவதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
போரின் பின்னரான காலப்பகுதியில் மக்களின் குடியிருப்புக்கள் கண்டபடி எல்லைப்பரப்புக்களை மீறி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பில் வனவள அதிகாரிகளும், வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர்களும் இணைந்து தெளிவான அறிக்கை ஒன்றை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு வழங்கவேண்டும் என கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையை இனிமேலும் இழுத்தடிக்காமல் மக்களின் நலனை மையமாக கொண்டு தீர்த்துவைக்குமாறு அங்கு வலியுறுத்தப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களில் சில அநாமதேய பேர்வழிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி, வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு கடன் தருவதாக ஏமாற்றி வருவது குறித்து அங்கு கூறப்பட்ட போது, வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராயுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டதோடு, பிரதேசத்திலுள்ள விழிப்புக்குழுக்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளுமாறும் வேண்டினார்.