ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (05) இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது மற்றும் அதுதொடர்பான பிரேரணைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படுவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளும் ஜனாதிபதியைச் நேற்று சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எவ்வித இடையூறுமின்றி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.