கட்டுரைகள்பிரதான செய்திகள்

இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்! அமைச்சர் ஹக்கீம் அபாய அறிவிப்பு

(மப்றூக் )

ர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை கீழே இறக்கியுள்ளது.

இந்த அறிக்கையினால் இலங்கையின் நிலைவரம் சற்று பாதிப்படையும். அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இடுப்புப் பட்டிகளை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்கிற அபாயகரமான அறிவிப்பை நான் செய்தாக வேண்டியுள்ளது என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் அமையவுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கான நிர்மாணப் பணிகளுக்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்ளூ

“இலங்கை தனது பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஏற்கனவே, வரவு – செலவுத் திட்டத்தில் நாம் கூறியிருந்த விடயங்களில் சிறிது மாற்றங்களை செய்ய வேண்டிய ஒரு சிக்கலை எதிர்நோக்கியுள்ளோம்.

நாட்டிலுள்ள பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகள் அதிகமாக இல்லை. அவ்வாறு செய்ய வேண்டுமாயின் வரி அறவிடுதலை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும். இப்படி குறிப்பிட்ட ஒரு சில வழிகள் மாத்திரம்தான் உள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், சர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை கீழே இறக்கியுள்ளது.

இந்த அறிக்கையினால் இலங்கையின் நிலைவரம் சற்று பாதிப்படையும். அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இடுப்புப் பட்டிகளை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்கிற அபாயகரமான அறிவிப்பை நான் செய்தாக வேண்டியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவரும் முயற்சிகளில் நாங்கள் மேலும் தீவிரம் காட்ட வேண்டியுள்ளது.

முன்னைய அரசு – பெரிய உட்கட்டமைப்பு வசதிகளையெல்லாம் செய்தார்கள் என்று பெருமையாகச் சொன்னாலும், இந்த நாட்டின் கடன் சுமையை, சுமக்க முடியாதளவுக்கு, முன்னைய ஆட்சியாளர்கள் அதிகரித்து விட்டுச் சென்றுள்ளனர். கடனை திருப்பிச் செலுத்துவதுதான் இப்போது எமக்குள்ள பாரிய பிரச்சினையாகும்.

சகாய அடிப்படையிலான கடன் பெறுவதற்குரிய முயற்சிகளில் நாம் ஈடுபட உத்தேசித்துள்ளோம். ஆனால், மேற்குலக நாடுகளிடம் கடன் தருவதற்கு பணம் இல்லை. அடுத்த மாதம் பிரதம மந்திரி சீனா செல்லவுள்ளார். நானும் செல்கிறேன். அங்கு சகாய அடிப்படையிலான கடனைப் பெற உத்தேசித்துள்ளோம். இந்த நிதி மூலம் உட்கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்தவுள்ளோம்.

தேர்தல்கள் வரும்போது, அரசு – என்ன அபிவிருத்திகளைச் செய்துள்ளது என்பதைத்தான் மக்கள் பார்க்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அரசு எவ்வாறு அபிவிருத்திகளைச் செய்தது என்பது குறித்து யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கண்ணுக்குத் தெரிகிற வகையில் என்ன அபிவிருத்திகள் நடந்துள்ளன என்று பார்ப்பதில்தான் மக்களின் ஆர்வம் உள்ளது.

உரத்துக்கு வழங்கப்பட்ட மானியத்தினை இந்த அரசு நிறுத்தி விட்டதாக, பெரியதொரு விமர்சனம் தலைதூக்கியுள்ளது. இதனால், ஆர்ப்பாட்டங்களும் ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் நெல்லுக்குப் பெறுமானம் இல்லை என்கிற நிலையும் தோன்றியுள்ளது.

எல்லாவற்றினையும் சமப்படுத்திக்கொண்டு, பொருளாதார வீழ்ச்சிகளை சமாளித்துக் கொண்டு, மக்கள் நலனைப் பேணுகின்ற முயற்சிகளைச் செம்மையாகச் செய்வதென்பது சிக்கலுக்குரிய விடயமாகும்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறும்போது, அவர்களுடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வது சம்பந்தமாக நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடைபெறவுள்ளன.

இவ்வாறான சிக்கல்களுக்கிடையில், நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு நிம்மதியான வாழ்க்கை சிறுபான்மை சமூகங்களுக்குக் கிடைத்திருக்கிறது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது, வலிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களிடம் சண்டைக்கு வருகின்றதொரு நிலைவரத்தினை இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் மத்தியில் சில விபரீத இயக்கங்கள் உருவாக்கிக் கொண்டிருந்தன. அந்த இயக்கங்களுக்கு தூபம் போடுகின்ற வேலைகளை முன்னைய ஆட்சியாளர்கள் இருந்தனர்.

சிறுபான்மை சமூகங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையே தேவைப்பட்டது. நிம்மதியானதொரு சூழ்நிலையினை உருவாக்கித் தருமாறு கோரியே, சென்ற தேர்தலில் இந்த அரசுக்கு வாக்களிக்கப்பட்டது. ஆயினும் அதையெல்லாம் சற்று மறந்து விட்டோம். நல்லாட்சியைக் கொண்டுவந்தாயிற்று, இனி துரிதமாக அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டும், வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், குடும்ப வருமானத்தினை அதிகரிப்பதற்கான வழி வகைகள் செய்யப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள் மக்களிடம் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்று பிரதம மந்திரி கூறியிருந்தார். அந்த உறுதிமொழியுடன்தான் இந்த அரசை ஏற்படுத்தினோம். ஆனால், அவ்வாறானதொரு தொகை வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு நிறையவே சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது” என்றார்.

இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

உலமா சபையின் கோரிக்கை! தொழுகையினை நிறுத்துங்கள்

wpengine

அரசின் பாதகமான நடவடிக்கைகளை தட்டிக்கேட்பன்! முசலி வட்டார பிரச்சினை கூட பேசி உள்ளேன் அமைச்சர் றிஷாட்

wpengine

டிக் டொக் மோதல்! 17 வயதான அப்துல் லத்தீப் கத்தியால் குத்தி கொலை

wpengine