கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஆட்டமிழக்கச் செய்யும் அரசியல் சிந்தனைகள்;சிறுபான்மை அணிகள் சாதிப்பது எவ்வாறு?

சுஐப் எம். காசிம்-
மூன்று விடயங்களின் கருத்தாடல்கள், இலங்கையின் தேசிய அரசியலை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இவை நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுடன் தொடர்புபடுவதுதான், சர்வதேசத்தின் வாசற்படி வரை நிலைமையை இழுத்துச் சென்றுள்ளது. ஜனாஸா எரிப்பு, புதிய அரசியலமைப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் ஆகிய இம்மூன்றும் வெளிநாடுகள் தலையிடும் உள்நாட்டு விவகாரமாகி வருகிறது. மார்ச் மாதத்தில் ஜெனீவாக் கூட்டத் தொடரும் ஆரம்பமாவதால், வெளிநாடுகளில் கூவி விற்கப்படும் உள்நாட்டுப் பண்டங்களாக இவ் விடயங்கள் விலைபோகின்றன. இதனால், நிலைமைகளைக் கையாள்வது பற்றித்தான், அரசின் கவனம் குவிந்து வருகிறது. தமக்கு ஆதரவான மக்கள், சமூக, மத சக்திகளை உள்நாட்டில் மேலும் பலப்படுத்துவது மற்றும் சர்வதேசத் தளங்களில்,மேற்கொள்ளப்படும் நகர்வுளைத் தகர்த்து, நிலைப்படுவது என்பதுதான் அவைகளாகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் இப்பணிகளை கச்சிதமாகவே செய்யும்.


கொவிட் 19 நிலைமைகளை வைத்து இலங்கைக்குள் வரும் நிதியுதவிகள், சட்ட விரோத சக்திகளிடம் செல்லாது தடுப்பதில், அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்றும், ஜெனீவாவில் இலங்கை அரசின் நிலைப்பாடுகளை ரஷ்யா ஆதரிக்குமெனவும் ரஷ்யத் தூதுவர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள், அரசாங்கத்தின் முன்நகர்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்தக் கையோடும், களத்தோடுமே உள்நாட்டு சக்திகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
தென்னிலங்கையை ஒன்றுபடுத்திய “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்ப, புதிய அரசியலமைப்பு வரையப்படவுள்ளதும் இதற்காகத்தான். இந்தப் புதிய அரசியலமைப்பு வந்துவிட்டால், சமஷ்டி, பிராந்திய நிர்வாகம் மற்றும் இன, மொழிவாரியான அதிகாரக் கூறுகள் இல்லாமலாகிவிடுமே! இந்நோக்கில்தான், இப்புது வருடத்திற்குள்ளாவது உத்தேச அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான களப் பணிகள் துரிதமாக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் உள்ள பலத்தை வைத்து இந்த அரசுக்கு எதைத்தான் செய்ய முடியாது.


மார்ச் மாதத்தில் நடாத்தப்பட இருந்த மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டமையும் இதற்காகத்தானோ? என்றும் சிலர் சிந்திக்கின்றனர். ஒன்றை மட்டும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலுக்கு அஞ்சிய அரசியல்வாதிகள் இல்லை ராஜபக்ஷக்கள். நாட்டின் கடந்தகால வரலாறு தெரிந்தோருக்கு இவ்விடயம் நன்றாகத் தெரியும். தேவை ஏற்பட்டால், தேர்தலை நடாத்தி, தங்களின் மக்கள் ஆதரவை மீண்டுமொரு முறை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தவும் ராஜபக்ஷக்கள் தயார்தான். ஜெனீவா நிலைமைகளை எதிர்கொள்ள அரசுக்கு இது சாதகமாகவும் இருக்கும். ஒருவேளை, தேர்தல் நடத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பான அணிகளின் எழுகைகள் பலப்படவே செய்யும். சிறுபான்மைச் சமூகங்களுக்கே உரித்தான, சிதறிச் செல்லல் அரசியல் கலாசாரத்தில் இது சாத்தியம்தானே! அவ்வாறு சாத்தியப்பட்டால், பிராந்திய அதிகாரங்களுக்கான தனியரசியல் அர்த்தமிழக்கவே செய்யும். கையிலிருந்த யாழ் மாநகர சபை ஆட்சியும் தமிழ் தேசியத்தின் பிடியிலிருந்து நழுவிய நிலையில், இவை எல்லாம் நடக்காதென் பதெற்குமில்லை. இருப்பினும் புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகளை பல அரசியல் கட்சிகள் அனுப்பியுமுள்ளன.


இலங்கை, இந்திய ஒப்பந்தப் பிரகாரம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கும் மேலாக, பதின்மூன்று பிளஸ்ஸுக்கு அப்பால் சென்று, மாகாண சபைகளைப் பலப்படுத்த வேண்டுமென்பது தமிழர் தரப்பிலான அரசியல் முன்மொழிவு. யுத்தம் முடிந்ததற்குப் பின்னர் (2010 முதல் 2015) இலங்கையைச் சூழ்ந்துகொண்ட சர்வதேச நெருக்குதல்களிலிருந்து மீளும் நோக்கில்தான், ராஜபக்ஷக்களின் அன்றைய அரசு “13 பிளஸ்” பற்றிச் சிந்தித்தது. பின்னர், தமிழ் மொழிச் சமூகங்களின் இதுபோன்ற அபிலாஷை கள் கண்டுகொள்ளப்படாததாலே 2015 இல் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இந்த மாற்றத்தை சிறுபான்மையினருக்கு ஆதரவான சர்வதேச சக்திகள் ஏற்படுத்தியதென்றுதான் தென்னிலங் கை நம்பவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலை யில், அதிகாரங்களைக் கூறுபோடும், இன, மொழி அடிப்படையிலான பிராந்திய நிர்வாகங்கள் (மாகாண சபைகள்) உத்தேச அரசியலமைப்புக்குள் இருப்பதை எதிர்பார்க்க இயலாது. தற்போதைய நிலையில், இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் எதையாவது சாதிப்பதாக இருந்தால், சார்ந்து செல்வது, சமயோசிதமாகச் சிந்திப்பது, தருணம் பார்த்துப் பேசுவதாகவே இருக்க வேண்டும். மாறாக சிங்களத்தைச் சீண்டும் எந்தப் பொறிமுறைகளும் பெறுமதியற்றே போகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள 145 எம்.பி. க்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பேரும் இணக்கமின்றி செயற்படுவது, அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தில் சரிவை ஏற்படுத்தாது என்பதற்கில்லை. இச் சந்தர்ப்பத்தை, இங்குள்ள மூன்று முஸ்லிம் எம்.பி க்களும் சிறுபான்மை அணிகளும் எப்படிப் பயன்படுத்துமோ தெரியாது. மாகாண சபைகள் இல்லாத புதிய அரசியலமைப்புக்குள் முஸ்லிம்களின் அபிலாஷைகளும் இருக்காது என்பதைக் கோடிட்டுக் காட்ட வேண்டியதில்லையே! ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற திட்டத்தில் ஆளுக்கொன்று இருக்காதுதானே! எனவே, இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில்தான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள சிறுபான்மை அணிகள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு ஏற்பட்டால் 124 எம்.பி க்களின் ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் எழவே செய்யும். எனினும் இன்றைய நிலையில், இதற்கான சாத்தியங்கள் சந்தேகமே.


ஜனாசாக்களை எரிக்கும் விடயத்தில் முஸ்லிம்களுக்குள்ள உள்ளக் கொதிப்புக்கள், குமுறல்கள் அத்தனையும் உணர்பூர்வமானவை. இதில், இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால், அடையும் வழிகளையும் அடைத்துவிடுமளவிற்கு, சிலரது செயற்பாடுகள் உள்ளதுதான் கவலை. 2013 மற்றும்2014 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு ஆதரவாக ஜெனீவாவில் செயற்பட்ட முஸ்லிம் தரப்பு, இன்று அதே அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம், அமர்க்களம். ஒரு சமூகத்தின் அரசியலையே, ஆட்டமிழக்கச் செய்யும் இந்தச் சிந்தனைகள், செயற்பாடுகள் இன்றைய அரசியல் நிலையில் ஆக்கபூர்வமானதுதானா?
புலிப்பாலைக் குடித்துக் கொண்டு, தாய்ப்பால் சுவை உணரும் புலம்பெயர் எழுத்தாளர்களும் இதுபற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லையே! ஈழச் சிந்தனைகளுடன், ஜனாசா எரிக்கப்படும் மத வேதனைகளை ஒன்றுபடுத்த முடியாது. புலம்பெயர் நாடுகளில் கிடைத்துள்ள செல்வச் செருக்கும், செழிப்புத் திளைப்பும் இவர்களைச் சமயோசிதமாக சிந்திக்க வைக்காது.

உயர்ந்து நிற்கும் தமிழ் தேசியத்தின் புலம்பெயர் களங்கள், மூன்றாம் சமூகத்தின் மத நம்பிக்கையை அரசியலுடன் கலந்துவிடாமல் பணியாற்றுவதுதான், ஜெனீவாவின் வெற்றிகள் யாருக்கு என்பதைத் தெளிவுபடுத்தும்.

Related posts

வன சரணாலய வர்த்தமானிப் பிரகடனத்தை வாபஸ் பெற உதவுங்கள் பெரேரா ,றிஷாட் வங்காலை மக்கள் கோரிக்கை.

wpengine

நல்லாட்சியை தோற்கடித்து, இந்த கள்ளாட்சி, பதவிக்கு வந்தது.

wpengine

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்

wpengine