துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, மரண தண்டனை குறித்த விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் புரட்சியில் ஈடுபட்ட சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் தயீப் எர்டோகன், துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பது குறித்த விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
இராணுவத்தில் உள்ள சிறு பிரிவினரால் ஆட்சி கவிழ்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயன்றவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும். அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் சிலர் எழுப்ப வாய்ப்புள்ளது.
இராணுவம் நம்முடையது தான். துணை அமைப்பு கிடையாது. நான் தான் தலைமை கமாண்டர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, துருக்கி அதிபருக்கு ஆதரவாக இஸ்தான்புல் நகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தெருவில் இறங்கி ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் துருக்கிக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.