கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஆட்சியினை தீர்மானிப்பவர்களாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் இருந்தார்கள்! கண்டனம்

அப்பாவி ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக மியன்மார் அரசாங்கம் நடத்தும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை முஸ்லிம் கவுன்ஸில் ஒஃப் ஸ்ரீலங்கா வன்மையாகக் கண்டிக்கின்றது.

ரோஹிங்கியா என்பதன் கருத்து ‘ரோஹாங்கின் வாரிசுகள்’ என்பதாகும். இப்போது ராகின் என்று பெயர்மாற்றப்பட்டிருக்கின்ற அரகான் பிராந்தியத்துக்கான முஸ்லிம் பெயரே ரோஹாங் என்பதாகும். ராகின் பிராந்தியமானது 10 நூற்றாண்டுகளாக ஒரு முஸ்லிம் இராச்சியமாக  முஸ்லிம்கள் அப்பிராந்தியத்தின் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக இருந்துவந்தாக ரோஹிங்கிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

ஒரு முஸ்லிம் நாடான பங்களாதேஷ் மறைமுகமாக வழங்குகின்ற இராணுவ மற்றும் தள ரீதியான உதவிகளையும் முஸ்லிம் கவுன்ஸில் கண்டிக்கின்றது. ரோஹிங்கிய மக்கள் இந்தியாவின் வங்க பகுதியிலிருந்து சென்று குடியேறியுள்ளதாக நம்பப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தின் ஒரு பகுதி இப்போது பங்களாதேஷாக மாறியுள்ளது. இவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கும் அல்லது அகதி முகாம்களில் வாழ்கின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக ரோஹிங்கியர்களை பர்மிய முஸ்லிம்களாக அங்கீகரிக்கும் பொறுப்பு பங்களாதேஷுக்கு உள்ளது.

1982 இல் ஜெனரல் நீ வின்னின் அரசாங்கம் பர்மிய பிரஜை சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் ரோஹிங்கியர்களுக்கு பிரஜா உரிமையை மறுத்தது. எனவே, பெரும்பாலான ரோஹிங்கிய மக்கள் நாடற்றவர்களாயினர். இது 1964 இன் சிரிமா-சாஸ்திரி உடன்படிக்கைக்கு முன்னைய தோட்ட தமிழ் தொழிலாளர்களின் நிலையை ஒத்ததாகும்.
17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் பிரதானமாக பர்மாவின் அரகான் பிராந்தியத்தில் வாழ்ந்து வருகின்ற ரோஹிங்கிய மக்களை, மாறி மாறி வந்த பர்மிய அரசாங்கங்கள் துன்புறுத்தியே வந்தன. அத்தோடு, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுமுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், வழமையான தேசியவாத விவகாரத்தின் ஒரு பகுதியாக மாறியிருப்பது தெளிவாகும். கடும் தேசியவாத பௌத்தர்கள் ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக வெறுப்பையும், மத சகிப்பின்மையையும் பெருமளவு தூண்டிவருவது தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் உள்ளன. அதேவேளை, ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக பர்மிய பாதுகாப்பு படைகளும் கொலை, காணமலடித்தல், எதேச்சாதிகர கைது மற்றும் தடுத்து வைத்தல், சித்திரவதை செய்தல், பலவந்த ஊழியம் ஆகியவற்றை மேற்கொண்டுவருவது தொடர்பிலும் போதிய ஆதாரங்கள் உள்ளன. ரோஹிங்கிய மக்கள்தான் உலகளில் அதிகளவில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினம் என சர்வதேச ஊடகங்களும், மனித உரிமை நிறுவனங்களும் அடிக்கடி குறிப்பிட்டு காட்டுகின்றன. பர்மிய பௌத்த தலைவர் அசின் விராது ‘பௌத்த தீவிரவாதத்தின் முகம்’ என்றுகூட அழைக்கப்படுகிறார்.
அருள்பொருந்திய அரபா தினத்தில் ரோஹிங்கிய மக்களின் துன்பம் நீங்க துஆ மேற்கொள்ளும்படி, உலக முஸ்லிம்களை நாம் வேண்டிக்கொள்கிறோம்.

மியன்மார் மற்றும் பங்களாதேஷ் அரசாங்கங்களை கண்டிப்பதற்கும், ரோஹிங்கிய மக்களின் நாடற்ற நிலை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கும், அனைத்து வகையான இராஜதந்திர வழிகளையும் கையாளுமாறு, நாம் வெளிவிவகார அமைச்சை வலியுறுத்துகிறோம்.
மியன்மாரை சூழ உள்ள முஸ்லிம் நாடுகளான – உதாரணமாக மலேசியா, இந்தோனேசியா, புரூனை மற்றும் பங்களாதேஷ் ஆகியன, ரோஹிங்கிய சமூகம் எதிர்கொள்கின்ற அப்பாவி சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் மீதான படுகொலைகளை தடுப்பதற்காகவும், ரோஹிங்கிய மக்களின் நாடற்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று அழைக்கின்றோம்.

ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை நிறுத்திக்கொள்ளுமாறு மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்கள் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளமையால், ரோஹிங்கிய மக்கள் மேலும் படுகொலைகளுக்கு உட்படமால் பாதுகாப்பதற்காக, பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ தலையீடு என்பவற்றின் ஊடாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் நாம் வலியுறுத்துகின்றோம்.

மியன்மார் அரச தலைவர் ஆங் சான் சூகியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுவந்து, போர்க் குற்றங்களுக்காக அவரை குற்றவிசாரணைக்கு உட்படுத்துமாறு, நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் வலியுறுத்துகிறோம். ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களில் ஆங் சான் சூகியின் அரசாங்கம் வகிக்கும் பங்கு எந்தவொரு சந்தேகமுமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட நோபள் பரிசை உடனடியாக மீளப்பெறுமாறு, நாம் நோபள் குழுவிடம்  வலியுறுத்துகின்றோம். ஏனெனில், சமாதானத்தை உருவாக்குபவராக அல்லாது, நிராயுதபாணிகளான பொதுமக்களை படுகொலை செய்வதற்கான போர்முழக்கத்தை வழங்குபவராகவே அவர் செயற்படுகிறார். ஆங் சான் சூகி ஒரு இனவாதி என்பது பிபிசி உடனான ஒரு நேர்காணலின்போது, நன்கு தெளிவாகியுள்ளது. அந்த நேர்காணலின்போது, மிஷல் ஹுஸைன் என்ற ஊடகவியலாளர், ஆங் சான் சூகியிடம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் வினவியபோது, ‘என்னை ஒரு முஸ்லிம்தான் நேர்காணப்போகிறார் என்பது பற்றிய எனக்கு தெரிந்திருக்கவில்லை.’ என்று குறிப்பிட்டார்.

இறுதியாக ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை மேற்கொள்ளும் உயர் அரச அதிகாரிகள் முதல் இன்னுமே அப்பாவி பொது மக்களை கொலை செய்து வரும் இராணுவம் வரையிலுமுள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வரையில், மியன்மாருடனான இராஜதந்திர உறவை துண்டிக்குமாறு அனைத்து உலக நாடுகளிடமும் நாம் வேண்டிக்கொள்கிறோம்.
N M Ameen
தலைவர்
முஸ்லிம் கவுன்ஸில் ஒஃப் ஸ்ரீலங்கா

Related posts

புகைத்தலுக்கு எதிரான சமூர்த்தி கொடி திட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி

wpengine

நேர்முக தேர்வில் வவுனியா தெற்கு வலய பாடசாலை தொண்டர் ஆசிரியர்கள் விடயத்தில் பக்கசார்பு!

wpengine

ரவூப் ஹக்கீமின் போலியான அரசியலும்,செயற்பாடும்

wpengine