(அபு ரஷாத் ,அக்கரைப்பற்று)
வன்னியின் ஒளி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நஸீர் அமைச்சர் றிஷாத் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மு.காவிற்கு எதிராக சதி செய்வதாக கூறியுள்ளார்.மு.காவை வெளிநாடுகள் சதி செய்து அழிக்குமளவு எந்த தேவையுமில்லை என்பதை சிறு பிள்ளையும் அறியும்.கோடிகள் கொடுத்தால் அவர்களை விரும்பியவர்கள் விரும்பிய பாட்டுக்கு வலைத்துக்கொள்ளலாம் என்பது வேறு விடயம்.இலங்கையின் தேசிய அரசியலில் வெளிநாட்டு பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற செய்தி அதிகம் பேசப்படுகிறது.இந்த பேச்சுக்களை மாகாண சபை உறுப்பினர் நஸீர் இங்கும் அடித்து விட்டுள்ளார்.
இன்று மு.காவில் நடைபெறும் வெட்டுக்குத்துக்கும் அமைச்சர் ரிஷாதுக்கும் என்ன சம்பந்தமுள்ளது? பஷீரின் பிரச்சினையாக இருந்தாலும் சரி ஹசனலியின் பிரச்சினையாக இருந்தாலும் சரி இன்று மு.காவில் இடம்பெறும் பிரச்சினைக்கு பிரதான காரணம் தேசியப்பட்டியலாகும்.இதனை யாவரும் ஏற்றுக்கொள்வார்கள்.இப்படி இருக்க இதனை முஸ்லிம்களின் கணிசமான ஆதரவைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத்துடன் தொடர்பு படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.அவர் இந்த பிரச்சனைகளை தனது சிந்தனைக்கும் எடுக்காது செயற்பட்டு வருகிறார்.இதனை அவரது செயற்பாடுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.ஆடத் தெரியாதவன் அரங்கை கோணல் என்டானாம் என்ற கதை போன்றே மாகாண சபை உறுப்பினர் நஸீரின் பேச்சை நோக்கலாம்.
இதில் ஒரு மறைமுக உண்மையும் உள்ளது.முன்பெல்லாம் இலங்கை முஸ்லிம்களுக்கு மாற்று கட்சி பற்றிய சிந்தனைகள் இல்லாததன் காரணமாக அடித்தாலும் பிடித்தாலும் மு.காவுடன் ஒட்டி உறவாடினார்கள்.தற்போது மயில் மரத்திற்கு நிகராக,இன்னும் சொல்லப் போனால் மரத்தையும் விட அதிக வளர்ச்சியில் உள்ளது.இது ஹக்கீமிற்கு பலத்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.முன்பு போன்று தான் நினைத்த பாங்கில் முடிவுகளை எடுக்க முடியாது.எனவே,அமைச்சர் றிஷாதினால் மு.கா அழிகிறது என மாகாண சபை உறுப்பினர் நஸீர் கூறியதில் உண்மையும் இல்லாமல் இல்லை.