(எம்.ரீ. ஹைதர் அலி)
எந்த ஒரு சமூகம் ஆத்ம ரீதியாக பண்படுத்தப்படுகின்றதோ அந்த சமூகம் எப்பொழுதும் எந்த சவாலையும் முகம் கொடுக்கக்கூடியதொரு சமூகமாக வாழும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஓட்டமாவடி, அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலைக்கு போட்டோகொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு 2017.08.11ஆந்திகதி-வெள்ளிக்கிழ மை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். பைஸல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கலந்துகொண்டு போட்டோகொப்பி இயந்திரத்தினை கையளித்துவிட்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
வெறுமெனே உலகம் சார்ந்த விடயங்களை மாத்திரம் நாங்கள் கற்றுக்கொள்வதற்கப்பால் ஆத்மீக ரீதியாகவும் தங்களை பண்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாக அஹதிய்யா பாடசாலையினுடைய விடயங்கள் இருப்பதனை நாங்கள் காண்கின்றோம்.
அஹதிய்யா பாடசாலை என்பது உண்மையில் நல்ல திட்டங்களை உள்ளடக்கியதாக சிறந்த முறையில் வரையப்பட்டதொரு பாடத்திட்டத்தினூடாக மாணவ மாணவிகள் போதிக்கப்படுகின்றார்கள் என்பதனை நாங்கள் மிக நீண்ட காலமாக அறிந்திருக்கின்றோம். அந்த முறையில் இப்பிரதேசத்திலும் அவ்வாறானதொரு பாடசாலையினை நிறுவி 19 வருடங்கள் கடந்த நிலையில் இவ்வாறானதொரு நிகழ்வில் கலந்துகொண்டமைக்காக அல்லாஹ்வுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஒரு சமூகத்தினை சரியான முறையில் வழி நடாத்துபவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அதிலும் குறிப்பாக அதிபர்கள் என்று சொல்லுகின்றபோது ஒரு பாடசாலையினுடைய அபிவிருத்தி சம்மந்தமாக வெறுமெனே பௌதீக வளத்தை மாத்திரமல்லாது ஒவ்வொறு பிள்ளைகளினுடைய கல்வி வளர்ச்சியிலும் அவர்களுடைய செல்வாக்கினைச் செலுத்த வேண்டும். எந்தவொரு ஆசிரியரோ அல்லது அதிபரோ அரசியல்வாதிகளுக்கு அடிபணிய வேண்டியதொரு தேவைப்பாடு கிடையாது. அவர்கள் மாணவர்களின் கல்வி விடயத்தில் மாத்திரமே கரிசனை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தமட்டில் கூடுதலான ஆண் பிள்ளைகள் தங்களுடைய கல்வியினை பாதியிலே விட்டு விடுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைமையினை நாங்கள் கண்டு கொண்டிருக்கின்றோம். அந்த பிள்ளைகள் உயர்தரம் வரை கல்வி கற்று பல்கலைக்கழகங்கள் சென்று பட்டதாரிகளாக வெளியேற வேண்டுமென்ற எண்ணத்திற்கப்பால் சென்று வெறுமெனே க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தரம் வரை கல்வி கற்றுக்கொண்டு தங்களுடைய கல்வியினை முடித்துக்கொண்டு குறுகிய கால கற்கைநெறிகளைக் கற்று வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கின்றதொரு கலாச்சாரம் நமது சமூகத்திற்குள் இப்பொழுது ஊடுருவிக்கொண்டு வருகின்றது என தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பிர் எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதம அதிதியினால் தேசிய மீலாத் நபி விழா போட்டியில் கோட்ட மட்டத்தில் வெற்றிபெற்ற ஓட்டமாவடி அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்களால் பிரதம அதிதிக்கு நினைவுப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.