மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு மாகாண உறுப்பினர்கள் ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி மாகாணசபையின் அடுத்த அமர்வுகள் நடைபெறும் போது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஊழல், மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்குவது பொருத்தமற்றது எனவும், அதற்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடையாது எனவும் தெரிவித்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆதரவளித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பதவி போன்ற முக்கியமான பதவிக்கு ஒருவரை நியமிக்கும் போது அனைவரினதும் நம்பிக்கைக்கு பாத்திரமான பொருத்தமான ஒருவரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாகாணசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும் என்ற நியதி கிடையாது எனவும், பெரும்பான்மை ஆதரவு இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.