(நாச்சீயா தீவு பர்வீன்)
ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் மிக முக்கிய ஆளுமையாக கருதப்படக்கூடியவர்களில் முன்வரிசையில் உள்ளவர் அஸ்ரப் சிஹாப்தீன்” எனும் இலக்கிய ஆளுமை.கவிதை,சிறுகதை,பத்தி நாட்டாரியல் என தமிழ் இலக்கியப்புலத்தில் ஓய்வின்றி இயங்குகின்ற மனியநேயமிக்க படைப்பாளி இவர் இவரது “என்னைத்தீயில் எரிந்தவள்” கவிதைத்தொகுதியானது மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணிய ஒன்றாகும்.வாசகர்களினாலும் விமர்சகர்களினாலும் மிகவும் விதந்துரைக்கப்பட்ட இந்தக் கவிதைத்தொகுதி பல அரசமட்ட பரிசில்களை தட்டிச்சென்றது.
யாத்ரா எனும் கவிதை இதழை உருவாக்கி ஈழத்தின் தமிழ் கவிதை செல்நெறிக்கு புதிய இரத்தம் பாய்ச்சும் பல நல்ல கவிஞர்களை அடையாளப்படுத்தினார்.யாத்ரா கவிதை சஞ்சிகையானது வெறுமனே பத்தோடு பதினொன்றாக இல்லாமல் கவிதை பற்றிய புரிதல்,புதிய பார்வை,கவிஞர்களின் வரலாறு,கவிஞர்களுக்கிடையிலான முரண்பாடுகள் என்பவற்றை இலக்கியச்செழுமையோடு வாசகனுக்கு வழங்கியது. “யாத்ரா” தற்காலிகமாக தடைப்பட்டுப்போனாலும் அது உருவாக்கிய கவிதை சார் அதிர்வின் பதிவு இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவரது மொழிபெயர்ப்பு நூல்களான ஒருசுறங்கைப் பேரித்தம் பழம், ஒரு குடம் கண்ணீர் என்பன இலங்கை தமிழ் வாசகர்களுக்கு அரிதாகவே கிடைக்கின்ற அரபுலகின் யதார்த்தத்தை அப்பட்டமாக படம்பிடித்து காட்டும் அருமையான படைப்புகளாகும். மொழிபெயர்ப்பு எனும் வெற்றுச்சொல்லாடல் மூலப்பிரதியின் உயிரை குடித்து கபளீகரம் செய்துவிடாமல் மூலப்பிரதியின் அழகியலும்,இலக்கியச்செழுமையும் இன்னும் அதிகரிக்கின்ற வண்ணமே அந்த மொழிபெயர்ப்புகள் இருப்பது அஸ்ரப் சிஹாப்தீன் எனும் இலக்கிய ஆளுமையின் பலமாகும்.
இவரது இன்னுமொரு மொழிபெயர்ப்பு சிறுகதைத்தொகுதி தான் “பட்டாம்பூச்சிக் கனவுகள்” இந்த சிறுகதைத்தொகுதியும் முன்னதைவிடவும் அதிக சுவாரிசியமிக்கதாகவும்.வாசனை வளைத்துப் போடும் வார்த்தைகளினால் கட்டமைக்கப்பட்டதாகவும் இருக்கும் என நம்பலாம்.
மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான இலங்கையின் உயர் இலக்கிய விருதான சாகித்திய மண்டல விருதினை பெற்றுள்ள அஸ்ரப் சிஹாப்தீன், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கோலங்களையும், வறுமையும்,யுத்தமும்,சீரழிவும் கொண்ட அரேபியாவின் இன்னொரு முகத்தை இனம் காட்டியுள்ளார்,அரேபிய சிறுகதைகளில் உள்ள எல்லா சாதகமான அடைவுகளையும் பயன்படுத்தி கொஞ்சமேனும் தொய்வு ஏற்படாமல் கதையை நகர்த்தும் பாங்கானது அஸ்ரப் சிஹாப்தீன் எனும் எழுத்தானின் ஆளுமையை நிறுவி நிற்கிறது. எதிர்வரும் ஞாயிறு 13.03.2016 அன்று இவரது “பட்டாம்பூச்சிக் கனவுகள் ” நூலின் வெளியீட்டு விழா மருதானை தெமடகொட வீதியில் உள்ள, வை.எம.எம.ஏ கட்டிடத்தில் இடம் பெற்றுள்ளது,மாலை நான்கு மணிக்கு இடம் பெறும் இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வளர்கள் பங்குகொள்ள முடியும்.