பா.நிரோஸ்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டு, இச்சம்பவங்கள் தொடர்பில் கைதாகியுள்ள அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அஸாத் சாலி கைது செய்யப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயமெனவும் கேள்வி எழுப்பினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களுக்கு எதிராக 30 வருடகால அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று, கடந்த 10 வருடங்களாக, முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர்களில் எவரையும் விடுவிக்குமாறு, தான் எவருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் விளக்கினார்.
சஹ்ரான் என்பவர் ஆபத்தானவர் என்றும் அவரைக் கைது செய்யுமாறும், 2017ஆம் ஆண்டே கூறிய அஸாத் சாலியை, ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடையவரெனக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது எந்த வகையில் நியாயமெனவும் கேள்வி எழுப்பினார்.
பயங்கரவாதிகளைக் கைது செய்வதற்கு பதிலாக, பயங்கரவாததுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதாகவும், ரிஷாட் எம்.பி கூறினார்.