[ ஊடகப் பிரிவு]
”முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் ஆரம்பித்து வைத்த அரசியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.அவரது கனவு,லட்சியம் நிறைவேறுவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 18 ஆவது நினைவுதின நிகழ்வை ஒட்டி அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஆசிச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
எமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணித்து 18 வருடங்கள் ஆகின்றன.இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் கிடைத்த பெரும் சொத்து அவர்.அந்தச் சொத்தை இன்று நாம் இழந்து தவிக்கின்றோம்.அரசியல் அநாதைகளாக நின்ற முஸ்லிம்களுக்கு ஒரு முகவரியைத் தந்துவிட்டு அவர் மறைந்துவிட்டார்.
முஸ்லிம்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெறுவதற்காகவும் முஸ்லிம்களுக்கு நிலையான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அவர் அயராது உழைத்தார்.அந்த உயரிய நோக்கிற்காகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியையும் உருவாக்கினார்.
ஆனால்,அவரது மரணத்திற்கு பின் இந்தக் கட்சியில் இருந்த பலர் கட்சியை விட்டுச் சென்று அவர்களது சுயநல அரசியலைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.அஷ்ரபின் லட்சியத்தை சிதைத்துவிட்டனர்.ஆனால்,நாங்கள் அப்படிச் செய்யவில்லை.அவரது உயரிய நோக்கத்தை அடைவதாவதற்காக இன்றும் இந்தக் கட்சியில் இருந்துகொண்டு போராடி வருகிறோம்.
நாம் இன்று அந்த மாமனிதனை இழந்து 18 வருடங்கள் ஆகிவிட்டன.இந்த 18 வருடங்களுக்குள் அவரது நோக்கத்தை அடைந்திருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இன்று முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
எமது சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் ஆரம்பித்து வைத்த அந்த உயரிய அரசியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.இதற்காக நாம் இன்றே உறுதிகொள்வோம்.
அன்னாரின் மன்னரை வாழ்வை வெளிச்சமாக்குவதற்கு நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திப்போம்.-எனத் தெரிவித்துள்ளார்.