Breaking
Fri. Apr 19th, 2024

சுஐப் எம்.காசிம் –

சிறுபான்மை சமூகங்களை அரசியலில் விழிப்புணர்வூட்டிய தலைமைகள், இன்றளவும் நினைவூட்டப்படுவதற்கு காரணங்கள் உள்ளன. அவர்களது இடைவௌிகளால் ஏற்பட்டுள்ள பலவீனங்களிலிருந்துதான் இந்நினைவுகள் எழுவதுண்டு. இன்றும் (23) இதுபோன்ற ஒரு தலைவரின் ஜனனம் நினைவுகூரப்படுகிறது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதல் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் பிறப்பு (1948.10.23) இப்படியொரு இறப்பை ஏற்படுத்தும் என எவரும் நினைக்கவில்லை. அதாவது, அரசியல் நோக்குகளுக்காக அவர் கொல்லப்படுவார் என்பதை அவரது வளர்ச்சியே கட்டியங் கூறியது. இளமையில் துளிர்விடத் துவங்கிய அஷ்ரஃபின் இலக்கியம், சட்டம், சமரசம் மற்றும் சமயோசித சிந்தனைகள் அவரை தலைவருக்குத் தகுதியானவராக அடையாளம் காட்டியது. அதேபோன்று, அஷ்ரஃபின் அந்திம கால அரசியல் செயற்பாடுகளிலும் ஆளுமை அசையாதேயிருந்தது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் வாக்குகள், எவரது தனிப்பட்ட செல்வாக்குகளுக்கும் உட்பட்டதல்ல என்பதை அவரது ஆளுமைகள் நிரூபித்திருந்தன. கட்சியை காப்பாற்றுவதற்காக “கருத்து பேதமெனும் கறையான்கள் மரத்தின் வேர்களை வேரறுக்கக் கூடாது” என அடிக்கடி முழங்கியவர் அஷ்ரஃப். ஆனாலும், அவரது கடைசி காலத்தில் இவ்வாறான கருத்து பேதங்களால் கட்சியின் வேர்களே தனித்துவத்துக்கு விறகுகளாகத் தொடங்கின. இவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து வௌியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்த அஷ்ரஃப், அவ்வாறு வெளியேறி, வேறு கட்சியில் போட்டியிட்டோரை தோற்கடித்தும் காட்டியிருந்தார். ஆனால், இதைக்காணும் சந்தர்ப்பத்தை காலம் அவருக்கு வழங்கியிருக்கவில்லை.

இவ்வாறான நாளில்தான் முஸ்லிம் தலைமைகள் தங்களை புடம்போட வேண்டும். கட்டுக்கோப்புக்கள் மீறப்படுவதும், சட்ட நடவடிக்கைக்கு சூளுரைப்பதும் பின்னர், சமரசம் அல்லது மன்னிப்பு என்று இயலாமைக்குள் ஔிந்துகொள்வதும் தனித்துவ அரசியலை மலினமாக்கியுள்ளது.

முஸ்லிம்களின் ஏக குரலாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தவிர எதுவும் இருப்பதை அஷ்ரஃப் விரும்பவில்லை. இது ஏகபோக உரிமைக்கான ஆசை அல்லது அதிகாரங்களை தனியே உறிஞ்சிக்கொள்ளும் அற்பத்தனம் என எதிரிகளால் விமர்சிக்கப்பட்டது. ஆனால், அஷ்ரஃபுக்குள் இருந்தது வேறு. வேகமாகப் பயணிக்கும் வாகனத்துக்கு சாலைகள் ஒரு பொருட்டில்லை. போய்ச்சேரும் இடமே பொறுப்பு எனப் பயணித்தார். அவரது காலத்தில் நமது நாட்டிலிருந்த அரசியல் பயணங்கள் அப்படித்தானிருந்தன.

தமிழர்களை சிங்களத்திலும், சிங்களவர்களை தமிழிலும், ஏன்?முஸ்லிம்களை இரண்டு மொழிகளிலும் பெரும்பான்மைவாதப் போக்குகள் ஏமாற்றத் தொடங்கிய சூழலது. எனவே, முஸ்லிம்களை கரைசேர்க்க அல்லது கரையேற்ற பல ஓடங்களைவிட, ஒற்றைத் தோணியே பாதுகாப்பானது எனக் கருதினார். இதற்காக, தனது ஆளுமையை அடிக்கடி நிரூபித்தவர் அஷ்ரஃப். இந்த ஆளுமைகள் அவரது இளவயதிலும் எடுத்தாளப்பட்டன. இது பிறப்பிடத்திலிருந்து அஷ்ரஃபை புலம்பெயர வைத்தது. இந்த நாட்டில் முதலாவதாக “ஹிஜ்ரத்” (புலம்பெயர்தல்) செய்தவராக, தன்னையே அடையாளம் காட்டியது அவரது புலமை.

வடக்கில் பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தை சர்வதேசளவில் அஷ்ரஃப் சந்தைப்படுத்தவில்லை. வடக்கை விடுவதா? கிழக்குடன் கை கோர்க்க கோருவதா? இதில் அஷ்ரஃபின் நிலைப்பாடு, இனப்பிரச்சினை தீர்வில் மூன்றாம் தேசியம் கோருவது என்பவற்றை தேர்தலுக்காக அஷ்ரஃப் பேசவில்லை. இதுபற்றி அவர் பேசினாலும் பேசாதிருந்தாலும் தேசிய அரசியலில் இவற்றை பேசுபொருளாக்கியவர். சமூகத்தின் ஏக சக்தியாக இருந்ததால் இவை சாதனைகளாகின.

இன்று எல்லாம் பேச்சாகவே உள்ளன. பேசுபொருளாக எவையும் இல்லை. ஓடங்களில் ஏறிக்கொண்ட ஒரே குடும்பம் அலைக்கழிவது போல. தேசியளவில் முக்கியம் பெறும் அரசியலமைப்பின் திருத்தங்களிலும் ஒன்றுக்கொன்று முரண்படும் நிலையில் நமக்கு பாதை ஏது? பயணம் எங்குள்ளது? இனி எதையும் சாதிக்க தேவையில்லை. செய்யவாவது நமது தலைமைகள் துணிய வேண்டும்.

வடக்குப் புலப்பெயர்வுக்கு விடிவு, கிழக்கில் தனியலகு, இன்னும் தெற்கில் தௌிவான அரசியலுக்கு நமது தலைமைகள் தயாராகுமா? சகோதர சமூக அரசியலில் அஷ்ரஃப் செலுத்திய ஆழப்பார்வைதான் சொந்த அரசியலுக்கு அடித்தளமிட்டது. தனித்துவ அரசியலில் இது நோக்கப்படல் அவசியம். இதை எண்ணி இன்றைய கள அரசியலில் ஆழம் செலுத்தி, அடுத்த நகர்வுக்கு தயாராக மக்கள் தயார். தலைமைகள் தயார்தானா? எதிரே வரவுள்ள அரசியல் களங்கள் கடும் கூர்மையாக இருக்கப்போகின்றன. எனவே, நேர்மையாக நடந்து இந்தக் கூர்மையைக் கடக்க வேண்டும்.

ஒரு காலத்தில், ஒரே பிரதமர் பதவிக்கு உரிமை கோரிய இரு தலைமைகள் இரண்டறக்கலந்துள்ள சூழலிது. இந்தக் கூர்மை அரசியல் நமது கண்களை குத்தாதிருக்க காய்களை நகர்த்துவதே சிறந்தது. இதற்காக அஷ்ரஃபின் ஆளுமையை அடியொற்றுவதே சிறப்பானது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *