வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றுச் சபைக்குத் தாமதமாக வந்த காரணத்தினால் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவருக்கு எச்சரித்தார்.
சபை அமர்வுகள் ஆரம்பிக்கும் போது அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் – என்று அவைத் தலைவர் வலியுறுத்திக் கூறினார்.
மாகாணசபையின் 107ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த அமர்வின் ஆரம்பத்தில் அவைத் தலைவரால் அரசியல் கைதிகள் தொடர்பான பிரேரணை கொண்டு வரப்பட்டது.
உறுப்பினர்கள் அதுதொடர்பில் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருந்தனர். கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரச தலைவருக்கு அது மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
அவ்வேளையில் சபைக்குள் நுழைந்த வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன், சடுதியாக எழுந்து கருத்துகளைப் பதிவிட முயன்றார்.
அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரேரணை தொடர்பான கருத்துகள் உள்வாங்கப்பட்டு அந்த விடயம் முடிவுறுத்தப்பட்டு விட்டது. நீங்கள் இனி கருத்துத் தெரிவிக்க முடியாது.
சபை ஆரம்பிக்கப்பட்டு இவ்வளவு நேரம் கழித்து வந்துள்ளீர்கள். நீங்கள் நினைத்தவாறு கருத்துகளைக் கூற முடியாது எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
இதனால் சபையில் சிறிது நேரம் இருவருக்கும் இடையில் சூடான விவாதம் இடம்பெற்றது.
நான் சபைக்கு வெளியே தொண்டர் ஆசிரியர்களை சந்தித்தமையாலேயே சபைக்கு பிந்தி வந்தேன் என அனந்தி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவைத்தலைவர், தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினை சம்பந்தமாக கதைக்க கல்வி அமைச்சர் இருக்கின்றார். நீங்கள் உங்கள் கடமைகளை விட்டு வேறு தேவையில்லாத விடயத்துக்குச் சென்று விட்டு இங்கு வந்து சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள் எனத் தெரிவித்தார்.