Breaking
Fri. Apr 19th, 2024

(சுஐப் எம்.காசிம்)    

மன்னாருக்கு மணி மகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல்தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல்வளமும், நிலவளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். எமது முன்னோர்களும் நாமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த பதி இது.

மன்னார் நகரில் இருந்து வடதிசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15ஆவது மைலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர்.

கிராமத்தின் மேற்கு எல்லையில் ஆழமற்றதும், மீன் நிறைந்ததுமான கடல் காணப்படும். கடல்வளம் இங்கு வாழும் மக்களுக்கு மீன் உணவும்,  ஊதியமும் அளிக்கவல்லது. வடக்கிலும், தெற்கிலும் தாழ்நிலப்பிரதேசம் காணப்படும். கிராமத்தின் கிழக்கில் 2500 ஏக்கர் வரை வயல் பிரதேசம் உள்ளது.

இவ்வயல் நிலங்கள் மக்களுக்கான உணவும், ஊதியமும் வழங்கவல்லன. வயல்களுக்கு இடையே காணப்படும் மேட்டு நிலங்கள் மரக்கறி தோட்டங்களாகக் காட்சியளிக்கும். இவ்வயல்நிலங்கள் 35 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 30 வரையான சிறு குளங்களும் வயல்களுக்கு இடையில் உள்ளன. வயல்வெளியின் கிழக்கிலே வான் உயர்ந்த காடுகள் உள்ளன.0ecabc11-deb0-4a0f-8fbe-b98868ab4919

கிழக்கிலே வன்னி நிலப்பரப்பில் பெய்யும் மழை நீர் வெள்ளம் பாலியாறு, பறங்கியாறு, நாயாறு எனும் ஆறுகளாகப் பிரிந்து பாய்கின்றன. மேற்கு நோக்கிப் பாய்ந்து வரும் நாயாற்று வெள்ளம், இடையே காணப்படும் பெரியமடுக்குளம், வெளிமருதமடுக் குளம் ஆகியவற்றுக்கு நீர் வழங்கி வருவதுடன் மிகுதி நீருடன் பல கிளைகளாக பிரிந்துள்ளது. விடத்தல்தீவு நெல்வயல்நிலங்களுக்கு நீர் விநியோகம் செய்யும். காலபோக விளைச்சலுக்கு இந்நீர் பயன்படும். குளங்களில் தேங்கிய நீர் சிறுபோகச் செய்கைக்கு பயன்படும். இவ்வாறு இருபோக விளைச்சல் தரும் வரம்பெற்றது விடத்தல்தீவு கிராமம்.

இந்தக் கிராமத்திலே இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என முச்சமய மக்களும் இன நல்லுறவுடன் ஒற்றுமை பேணி வாழ்ந்தனர். கிறிஸ்தவர்கள் கடற்றொழிலிலும், ஏனையோர் கமத்தொழிலிலும் ஈடுபட்டனர். கிராமத்தைச் சுற்றிவர காணப்பட்ட பசும்புல் தரைகள் கால்நடை வளர்க்கவும் பாலும் பணமும் பெறவும் உதவின. குத்தரிசிச் சோறும், கொழுத்த மீன் கறியும் உண்டு வளர்ந்த மக்கள் உடல் உரம்பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.43900f6a-f747-4d1b-ad5b-3c0d62b3cdb0

இங்குள்ள பள்ளமடுக்குளம் மக்களின் சமூக வாழ்வுடன் தொடர்புடையது. குளிர்ந்த நீரில் மனமகிழ்ச்சியுடன் குளிக்க இக்குளம் உதவியது. இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் நீராடும் குளம் இதுவாகும். உழைத்து வரும் உழவரும், களைத்து வரும் மீனவரும் குளக்கட்டில் அமர்ந்து நாட்டு நடப்பும், வீட்டு நிகழ்வும் பேசி எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வர். இன ஐக்கியம் இங்கே மலர்ச்சி பெற்றது.

1960 தொடக்கம், 1990 வரையான காலப்பகுதியில் கிராமத்தில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி உச்ச நிலை அடைந்தது. கற்க வேண்டுமென்ற ஆர்வமும் ஊக்கமும் நூறு சதவீதமாகக் காணப்பட்டது. தன்னலமற்ற அதிபர்களும், நன்மனத்துடன் உற்சாகமாக கற்பிக்கும் நல்லாசிரியர்களும் இக்காலப்பகுதியில் கல்விக் கடமையில் ஈடுபட்டனர். கிராமத்தில் அமைந்த அலிகார் ம.வி எனும் கலாநிலையம் கல்வி மேம்பாட்டுக்கு பெரிதும் உதவியது. அதுபோல விடத்தல்தீவு றோ.க.த.க  பாடசாலை கிறிஸ்தவ மாணவருக்கு கல்வி அளித்தது.

இவ்வாறான ஆனந்தமயமான வாழ்விலேதான் பேரிடி விழுந்தது. அதுதான் இடப்பெயர்வு. அக்கிரமக்காரரினால் ஏற்பட்ட வாழ்க்கைச் சீரழிவால்  சொத்து, கல்வி அனைத்துமே நாசமாயிற்று. முகாம்களிலே அமைந்த வாழ்க்கையால் பல்வேறு துன்பங்கள் எதிர்கொள்ளப்பட்டன. அதனால், அகதி மக்கள் குடியேற்றக் கிராமங்களை அமைத்தனர். ஹ{சைனியா புரத்தில் பெரியமடு மக்களும், நாகவில்லுவில் எருக்கலம்பிட்டி மக்களும் அல்மினாவில் தாராபுர மக்களும், கரிக்கட்டையில் காக்கையன்குளம் மக்களும் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் குடியமர்ந்ததால் அவ்விடங்களில் அமைந்த உயர்தரப் பாடசாலைகள், தமது கிராமிய மாணவரின் கல்வியை மேம்படுத்தி வருகின்றன. ஆனால், விடத்தல்தீவு மக்கள் ஒன்றிணையாமல் பிரிந்து 25 ஏக்கர், கரம்பை, அல்ஜித்தாவில் குடியமர்ந்தால் கிராமிய அடையாளங்கள் அழிக்கப்பட்டதுடன் விடத்தல்தீவு மாணவர்களுக்கென ஒரு தனியான பாடசாலை அமைத்து மாணவரின் கல்வியை மேம்படுத்த முடியவில்லை.

புத்திஜீவிகள் பல முறை பல இடங்களில் ஒருமித்து இது தொடர்பாக பேசியும் உருப்படியான முடிவு எட்டப்படவில்லை. ஒன்றிணைந்த குடியேற்றம் சிதைந்தது. இதனால், விடத்தல்தீவு மாணவரின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த வரலாற்றுத் தவறு ஈடுசெய்ய முடியாதது. விடத்தல்தீவு மக்கள் சொந்த கிராமத்தில் குடியேறி பழைய அலிகார் ம.வியை கட்டியெழுப்பி மாணவர் கல்வியை மேம்படுத்த  முடியும்.

போர் முடிவின் பின்னர் அநேகமாக எல்லாக் கிராமத்தவரும் சொந்த ஊரில் மீள்குடியேறி வருகின்றனர். ஒப்பீட்டளவில் விடத்தல்தீவு மீள்குடியேற்றத்தில் அசமந்த நிலையே காணப்படுகிறது. பொருள், பண்டம் இழந்த நிலையில் சொந்த மண் குடியேற்றத்தை பூச்சியத்தில் இருந்து தொடங்க முடியாது என்பதும் மாணவர் கல்வியில் திடீர் மாற்றம் ஏற்படலாம் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

எனினும் சொந்த மண்ணுடன் தொடர்பு இல்லாவிடின் பூர்வீக நிலங்களை இழக்க வேண்டி ஏற்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பல குடும்ப உறுப்பினர்களுடன் காணப்படும் குடும்பங்களில் ஒருசிலராவது, இந்த மண்ணில் மீள் குடியமர்ந்தால் காலவோட்டத்தில் கிராமம் மக்களால் நிறைந்துவிடும் சாத்தியம் உண்டு. எனவே, விடத்தல்தீவில் மக்கள் மீளக்குடியமர முன்வரவேண்டும்.

ஏற்கனவே அமைச்சர் றிசாத் அவர்களால் 25 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பும் நீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. தற்போது 50 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. குடியேறுபவர்களுக்கு அவை கையளிக்கப்பட உள்ளன. நீர், மின் வசதியும் செய்யப்படும். மேலும் விடத்தல்தீவு மக்களில் சிலர் சன்னாரிலே வீடு கட்டி வாழ்கின்றனர்.

சன்னார் புனரமைப்பும் குடியேற்றமும்

1955, 1956ம் ஆண்டுகளிலே பெரியமடுக்குளம் புனரமைக்கப்பட்ட பின்னர் விடத்தல்தீவில் உள்ள முயற்சியுள்ள விவசாயிகள் பெரியமடு கிராமத்தில் குடியேற்றப்பட்டனர். அந்த விவசாயிகள் காட்டை களனிகளாக்கி நெற்செய்கையிலும் தோட்டச் செய்கையிலும் அதிதீவிரமாக ஈடுபட்டனர். வெள்ளத்தால் நிறையும் பெரியமடுக்குளத்து வான் நீரும் பெரியமடு வயல்களில் வழிந்தோடும் நீரும் மேற்கு நோக்கி வந்து விடத்தல்தீவு விவசாயத்தை செழிப்படையச் செய்தன.

எனினும் தை, மாசி மாதங்களில் மழை குறைந்தும் ஆற்று நீர் அருகியும் போகும் போது விடத்தல்தீவு நெல்வயல்கள் பாதிக்கப்பட்டன. இந்த நட்டத்தை ஈடு செய்ய பெரியமடுவுக்கு மேற்கிலும், விடத்தல்தீவுக்கு கிழக்கிலும் அமைந்து தூர்ந்து போன வெளிமருதமடுக்குளத்தைப் (சன்னார்) புனரமைத்து நீர் பெற விடத்தல்தீவு விவசாயிகள் தீவிர முயற்சி எடுத்தனர். குளம் புனரமைக்கப்பட்டது. இந்த ஆக்கப்பணியிலே விடத்தல்தீவு விவசாயக் குழுவைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.அப்துல் காதர், மர்ஹூம் எம்.ஐ. அமீர், எம்.எல்.எம்.சரீப், ஏ.சி.எம்.மஹ்ரூப், வீ.எம்.காசிம், மர்ஹூம்களான கே. மீரா மொஹிதீன், கே.எம். இஸ்மாயில், புலியாகுளம் முஹம்மத் அப்துல் காதர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மன்னாரைச் சேர்ந்த மர்ஹூம் முஸ்தபா, எம். அக்பர்,  முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் அமைச்சர்களுடன் தொடர்பு கொள்ள உதவினர். அப்போது ஏ.சி.எல்.ஜி ஆகவிருந்த டான்போத் அவர்கள் செய்த பேருதவியை என்றும் மறக்க முடியாது.

சன்னார் புனரமைக்கப்பட்ட பின்னர் விடத்தல்தீவு நீர்த் தேவை பூர்த்தியாகி காலபோகம், சிறுபோகம் ஆகிய இருபோகங்களும் செய்கை பண்ணப்படுகின்றன. சன்னாரில் அமைந்த முறிப்பைச் சுற்றிவர சுமார் 60 ஏக்கர் வரை முன்னணி விவசாயிகளால் மிளகாயும் தோட்டப்பயிர்களும் பல ஆண்டுகள் செய்யப்பட்டன. இந்தப் பிரதேசம் தற்போது பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் சன்னார் குளத்துக்கும் பிரதான தெருவுக்கும் இடைப்பட்ட மேட்டு நிலத்தில் விடத்தல்தீவு விவசாயிகள் குரக்கன், எள்லு, சோளம் ஆகிய பயிர்களைச் செய்தனர். அன்றைய அரச அதிபராக இருந்த திரு. ஜெகநாதன் அவர்கள் இக்காணிக்கான பத்திரங்களை அளித்தார். அதனால் இந்தச் செய்கைப் பிரதேசம் ஜெகநாதன் பண்ணை என அழைக்கப்பட்டது.

மர்ஹூம் அப்துல் ஹமீத் (அத்திலிமீது அப்பா) அவர்களின் முயற்சியால் ஓர் ஓலைப் பள்ளி அமைக்கப்பட்டு தொழுகையும் நடைபெற்றது. இந்நிலங்கள் இடப்பெயர்வால் உரிமையாளர்களுக்கு இல்லாமல் போயின.

சன்னார் மேட்டுநிலப் பிரதேசத்தில் குடியேறும் எண்ணம் மக்களுக்கு இருந்த போதும் போர்ச் சூழலும் பின்னரான இடப்பெயர்வும்  குடியேற்றத்தைத் தடை செய்தன. எனினும் இன்று விடத்தல்தீவு மக்கள் சிலர் அங்கு குடியேற்றக் கிராமம் ஒன்றை அமைச்சர் றிசாத் பதியுதீனின் முயற்சியினால் அமைத்து வாழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது.

சன்னாரில் 600 ஏக்கர் அரச காணிகள் அமைச்சரின் முயற்சியினால் விடுவிக்கப்பட்டு, தலா அரை ஏக்கர் வீதம் விடத்தல்தீவு  மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய கிராமத்தில் ஒரு ஆரம்பப்  பாடசாலை ஒன்றும், இரண்டு பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சரால் வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் மக்கள் மீள்குடியேற்றம் இன்னும் அசமந்த நிலையில் உள்ளது.

விடத்தல்தீவு மீள்குடியேற்றத்தில் அமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். அந்தக் கிராமத்திலே இரண்டு பொது மண்டபங்கள் அமைச்சரினால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் தைக்காப்பிட்டியில் சந்தைக் கட்டிடம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. உள் வீதிகளும் திருத்தப்பட்டுள்ளன. அரை கிலோமீற்றருக்கு பிரதான வீதி தார் போடப்பட்டுள்ளது. கிராமிய வைத்தியசாலைக்கும் அமைச்சர் பல்வேறு உதவிகளை நல்கியுள்ளார். கடற்றொழிலாளர்களுக்கு வலைகளையும் வழங்கினார். எனினும் விடத்தல்தீவு மக்கள் மீள்குடியேற்றத்தில் இன்னும் ஆர்வம் காட்டி வராதது வேதனையானது.

பின்வரும் காரணங்களுக்காக விடத்தல்தீவு மக்கள் மீள்குடியேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

  1. சொந்தக் காணிகளையும் வீட்டுக் காணிகளையும் அண்டியுள்ள பிரதேசம் பறிபோய்விடும்.

  1. காலாகாலமாகச் செய்து வந்த வயல் கண்டங்கள் காடாகி வருகின்றன. உதாரணமாக சுல்தான் கமம், பெரியபுலவெளி, சின்னப் புலவெளி, புலக்காடு, புதுப்புலவு, பட்டாணி கட்டுக் கண்டங்கள் வயல் வரம்புகள் அழிந்து காடாகி வருகின்றன.

  1. மாற்றினச் சகோதரர்களிடம் வயல்காணிகள் போதியளவு இருப்பதால், குத்தகைக்குப் பெற்றுச் செய்கை பண்ணவும் ஆட்கள் இல்லை. இதனால் அழிவு தொடர்கின்றது.

  1. வயல்களும், வீட்டு நிலமும் பறிபோயும் அழிந்தும் வருவதால் கிராமத்தின் புகழ் மங்கிப் போவதுடன் கிராமம் அழிந்து வருகின்றது.

  1. மீள்குடியேற்றத்தில் அதிக பின்னடைவு காணப்படுட் பெரிய கிராமம் விடத்தல்தீவுதான்.

  1. 6. மொஹிடீன் பள்ளியும், பிரசித்த பெற்ற அலியார் கலாசாலையும் அழிந்த நிலையில் இருப்பதை நீடிக்க விடாது புனரமைக்க மீள்குடியேற்றம் அவசியம்.

  1. 7. விடத்தல்தீவு பள்ளி பரிபாலன சபையினர் பள்ளியில் காணப்பட்ட மிக முக்கியமான குறைபாடுகளை முடிந்தவரை நிவர்த்தி செய்து தொழுகையும் ஜும்ஆவும் நடைபெறக்கூடிய வகையில் வைத்துள்ளனர். இருந்த போதும் பள்ளியில் இன்னும் முக்கியமான சில திருத்த வேளைகள் செய்யப்பட வேண்டியுள்ளன.

மீள்குடியேற்றத்தில் மக்கள் காட்டும் ஆர்வத்தைப் பொறுத்தே கிராமம் பழைய நிலைக்குத் திரும்பும். விடத்தல்தீவு புத்திஜீவிகள் இனியாவது மீள்குடியேற்ற விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.    

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *