(ஜெம்சித் (ஏ) றகுமான்)
அம்பாறை மாவட்டத்தின் அழகிய கடற்கரை எனும் நாமத்தை தன்னெக்கதே வைத்திருந்த ஒலுவில் கடல் தாயின் அழகும் அங்கு மீன்பிடி தொழில் செய்பவர்களின் தொழிலும் கெட்டுப் போய் இருக்கின்றது.துறைமுக அபிவிருத்தி வேலைகளினால் அதிகளவான நிலங்களை கடல் நீர் ஆக்கிரமித்துள்ளது.தென்னை மரச்சோலைகளாக இருந்த நிலங்கள் தண்ணீராக காட்சியளிக்கிறது.
ஒலுவில் பிரதேசத்தின் ஜீவனோபாயத் தொழில் மீன்பிடியாகும்.கிழக்கில் அதிகளவாக மீன்களை ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மீன்பிடியில் பிரசித்தம் பெற்ற இடமாகும்.அண்மைக்காலத்தில் அங்கு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப்பாதையில் உள்ள மணல்களினால் படகுகளை கடலுக்குள் நகர்த்தி மீன்பிடித் தொழிலை மேற் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
சில வாரங்களாக இந்த நிலை நீடித்திருக்கிறது.இந்த பிரச்சினை சம்பந்தமாக ஒலுவில் பிரதேச மீனவர்களினால் உயர் அதிகாரிகளிடமும்,அரசியல் பிரதி நிதிகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டது.மீனவர்களின் முறைப்பாட்டை அடுத்து படகுப்பாதையில் நிரம்பி இருக்கும் மணலை அகற்றுவதற்கென அப்பிரதேசத்திற்கு இலங்கை மீன்பிடி துறைமுகத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று கொண்டுவரப்பட்டிருந்தது.
“ரெஜர் சயுறு”எனும் இந்த கப்பலை கொண்டு படகுப்பாதையில் நிரம்பி இருந்த மண் ஒருசில தினங்கள் மட்டுமே அகற்றப்பட்டது.அதன் பின்னர் இன்று வரை எந்த செயற்பாடுகளும் இன்றி தரித்து வைக்கப்பட்டிருக்கிறது.மணலை அகற்றாத காரணத்தை கேட்ட போது கப்பலுக்கு தேவையான எரிபொருளை நிரப்புவதற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படாமையினால் குறித்த செயற்பாட்டை தங்களால் தொடர்ந்து மேள்கொள்ள முடியவில்லை என சம்மந்தப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர்.
மீன்பிடித் தொழில் மூலம் தங்களது வாழ்வினை நகர்த்திச் செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து பணத்தினை திரட்டி கனரக இயந்திரம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் படகுப்பாதை ஊடாக வள்ளங்களை கடலுக்குள் செலுத்துகின்றனர்.ஒரு வள்ளத்தினை கடலுக்குள் செலுத்துவதற்கு கனரக இயந்திரத்திற்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டி உள்ளது.
மீனவர்களை பொறுத்தவரை பத்தாயிரம் ரூபாய் என்பது அவர்களினால் ஈடு கொடுக்க முடியாத தொகையாகும்.அண்மைக்காலத்தில் மீன்பிடித் தொழில் மூலம் குறைவான வருமானமே அவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறது.சில மீனவர்கள் கடன்களை பெற்று கனக இயந்திரத்திற்கு பணத்தை கொடுத்து தங்களது வள்ளங்களை கடலுக்குள் செலுத்துகிறார்கள்.இவ்வாறு கஷ்டங்களை எதிர்கொண்டு வள்ளங்களை கடலுக்குள் நகர்த்தும் நிலை நீடிக்குமாயின் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் தொழிலை இழந்து நிர்க்கதியாக்கபட்டு விடுவார்கள்.படகுப் பாதையில் நிரம்பிக் காணப்படும் மணலை அகற்றுவதற்கான நிரந்தர தீர்வை அவர்களிற்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.அதிகமான அரசியல்வாதிகளும்,அரசியற் கட்சிகளும் வந்து போகும் இந்த பிரதேசத்தில் இவர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு முடியாமல் இருக்கிறது.தேர்தல் காலங்களில் ஏமாற்று வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து செல்லும் அரசியல்வாதிகளாக மட்டும் இருந்துவிடாமல் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் முன்வர வேண்டும்.